Wednesday, January 19, 2011

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்......

அயல் தேசத்து வாழ்க்கை பற்றிய ஒரு கருத்து என்னை மிகவும் யோசிக்க வைத்தது... என்னுடைய பதிவு குறைகளை மட்டுமே சொல்வது போலவே இருக்கிறது என்பதே அந்த கருத்து... ஆம்... இங்கு நிறைகளும் இருக்கின்றன... முதலில் மக்களின் மனப்பாங்கு... அவர்கள் எங்குமே வேண்டுமென்று குப்பை போடுவதில்லை... அசுத்தம் செய்வதில்லை... தேடி குப்பை தொட்டியில் தான் போடுவார்கள்... அவர்கள் நாட்டின் மேல் எல்லோருக்கும் ஒரு பற்று இருக்கிறது... மேலும் எல்லா இடங்களிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது... வங்கி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எல்லாவற்றிலும் மக்கள் தங்கள் முறைக்கு பொறுமையாக காத்திருப்பார்கள்... திறமையாக வரிசையில் நுழையும் மக்கள்... யார் குரலுக்கும் கட்டுபடாமல் நேராக செல்லும் நபர்கள் எல்லாம் இங்கே பார்ப்பது அரிது....
மலேசியாவில் கடும் மழை பொழியும்... மழை நின்ற சில மணி துளிகளில் தண்ணீர் சென்ற இடம் தெரியாது..... மழைக்கு விடுமுறை இங்கு கிடையாது... என் நம் நாட்டில் மட்டும் எப்படி.... ஹரப்பா மொஹிஞ்சதரோ காலத்திலே வடிகால் வசதிகளில் முன்னேறி விட்டதாக வரலாற்றில் படிக்கிறோம்... ஆனால் நிஜமோ வேறு மாதரியாக இருக்கிறது... மழை காலங்களில் மக்கள் மீன்களை போல நீந்த வேண்டி இருக்கிறது...
மரங்களுக்கு இங்கு தரும் மரியாதை அதிகம்... முதல் முதலாக மலேசியா வரும் எல்லோரையும் கவரும் ஒரு அம்சம் இதன் பசுமை தான்... எங்கு பார்த்தாலும் மரங்கள், பூ செடிகள் என நெஞ்சை அள்ளும்... இங்கெல்லாம் செம்மொழிக்காக கூட பசுமைகள் அழிக்க படுவதில்லை.... இன்டர்நெட் இருந்தால் போதும்... எல்லாமே செய்து விடலாம்... மின்சாரம், தொலை பேசி, தண்ணீர், சாக்கடை வரி என அத்தனை கட்டணங்களும் இணையதளத்திலே கட்டி விடலாம்... மொபைல் போன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்... பதிவு அலுவலகங்களில் திருமண தேதி கூட பதிந்து கொள்ளலாம்.... காரில் இருந்து கொண்டே சுங்க சாவடிகளில் பணம் செலுத்தும் அட்டை, ரயில், பேருந்துகளில் பயண சீட்டு வாங்காமல் நேரடியாக பணம் கழிக்கும் தானியங்கி அட்டைகள் (smart cards) எல்லாம் கிடைக்கிறது.... இது போன்ற வசதிகளுக்கு மென்பொருள் எழுதுவது எப்படி இருந்தாலும் இந்தியராக தான் இருப்பார்... ஆனால் இத்தகு வசதிகளை இந்தியா முழுவதும் ஒரே அடியாக கொண்டு வர அரசாங்கத்துக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்... மாநகரங்களுக்கு இந்த வசதி வருகிறது வெகு விரைவில் நாடெங்கும் என செய்திகள் தான் வருகிறது ... நடைமுறைக்கு வருவதில்லை... ஒரே நாளில் நம் வேலை முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் அரசாங்க அலுவலகங்களுக்கு நம் நாட்டில் செல்ல முடியாது... ஆனால் இங்கு அது சகஜம்... Annexure Z1 ல இருக்கிற பத்திரம் எங்கே என இது வரை நான் சென்ற இடங்களில் கேட்டது இல்லை...
கல்வி நிலையங்களில் இங்கு காணப்படும் வசதிகள் மட்டும் நம் நாட்டு மாணவர்களுக்கு கிடைக்குமாயின், இந்திய மக்கள் உலகெங்கும் இதை விட அதிகம் பிரகாசிக்க முடியும்... எல்லா வகுப்பறைகளிலும் LCD projector, குளிர்சாதன வசதி, இணையத்தளத்தில் பாடம் சம்பந்தமான குறிப்புக்கள், அவர்கள் குறைகளை பயமின்றி எடுத்துரைக்கும் சுதந்திரம், செயல் முறையுடன் கூடிய பாடங்கள் என அவர்களுக்கு தனியார் கல்லூரிகளும் அதை விட அதிகமாக அரசாங்க கல்லூரிகளும் போட்டி போட்டு கொண்டு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கின்றன.... என் தங்கவேலு மாணவர்கள் இங்கு இல்லையே என பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன்.....
இங்கு வசதிகள் அதிகம்... சுகம் அதிகம்... சொகுசு அதிகம்.... மின்னிடும் அலங்கார விளக்குகளை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி நெஞ்சை அள்ளி போவதில்லையா? பகட்டான பலர் இருந்தாலும், அம்மாவை தேடி ஓடும் குழந்தையை போல... என் மனம் இதிலெல்லாம் ஒட்டாமல் நம் நாட்டின் மீது செல்வது இயற்கை தானே.... தாயையும் தாய் நாட்டையும் கேலி பேசி கொண்டு இந்தியா என்றாலே முகம் சுளிக்கும் பல வேடிக்கை மனிதர்கள் போல் நானும் அயல் நாடு மோகத்தில் வீழாமல் பார்த்து கொள் என் ஆண்டவா......

No comments:

Post a Comment