Friday, April 1, 2011

முடியாத கனவு.....

அம்மாவின் அரவணைப்பு.....
அனைவரின் பாசம்...
அண்ணன் தங்கையுடன் விளையாட்டு....
சாகாத டமார குட்டி கதை....
மீரா அக்காவுடன் சினிமா...
சாரதா அத்தையுடன் சுற்றுலா....
அப்பாவின் ஹீரோ மெஜெஸ்டிக்...
பெட்ரோல் வாசனையின் சுகம்.....
பள்ளியின் செல்ல பிள்ளை....
கோகுலம்... சிறுவர் மலர்....
குறுக்கெழுத்து போட்டியில் வென்ற 21 ரூபாய்...
விகடனில் முதலில் படித்த பூக்குட்டி....
சென்னை பயணங்கள்....
அரும்பிய முதல் மீசை... உடைந்த குரல்....
எனக்கென நண்பர்கள்... நண்பிகள்...
அரசியல் ஆர்வம்... இலக்கிய பரிட்சியம்....
பள்ளிகூட நினைவுகள்....
கல்லூரி கனவுகள்... கவிதைகள்....
நண்பர்களுடன் சண்டைகள்....
தளும்பிய கண்கள்....
பேருந்து அரட்டை... பின்னிரவு கலாட்டா....
அணிவகுத்த பொறுப்புக்கள்....
முகத்தில் அறைந்த வேலையின்மை....
விரிவுரையாளர் வாழ்க்கை.....
மதிக்கின்ற மாணவர்கள்....
சென்னையின் சொர்கவாசம்.
மலேசியாவின் நரகவாசம்....
துய்த்து முடிப்பதற்குள் எழுப்பிய அப்பா...
உனக்கு திருமணம் என்றார்....

Sunday, March 27, 2011

தொலைந்த விளையாட்டுக்கள்....

கோடை விடுமுறை நெருங்கி விட்டது... சமீபத்தில் இந்திய செல்லும் போதெல்லாம் கவனித்த விஷயம் என்பதை விட பாதித்த விஷயம் எனலாம்.... நமது குழந்தைகளின் விளையாட்டு முறை... சிறு வயதில் எனக்கு விளையாட்டு என்றால் ஒரு ஒவ்வாமை தான்... ஆனாலும் தெருவில் நண்பர்கள், அண்ணன் தங்கையுடன் , சொந்தங்களுடன் விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை.... ஓடி புடிச்சி, உக்காந்தா நின்னா, கல்லா மண்ணா, கரண்ட், கிரிக்கெட், கிட்டி புல், பம்பரம், கோலி, பறக்கும் தட்டு இப்படி எத்தனையோ... எல்லாவற்றிலும் எங்கள் அண்ணா கொடி கட்டி பறப்பான்... ஓடுகளை அடுக்கி வைத்து பறக்கும் தட்டால் தட்டி, ஓடி ஓடி தட்டும் மேலே படாமல் மீண்டும் அதை அடுக்கும் சுவாரசியம்... கிட்டி புல்லில் ரன் அளக்கும் முறை, ஓடி ஓடி கரண்ட் கொடுத்து அடுத்தவரை ஓட வைப்பது... விளையாட்டுக்கு விளையாட்டாகவும், ஒரு சிறந்த உடற் பயிற்சியாகவும் நமக்கே தெரியாமல் இருந்திருக்கின்றன... கோடை காலங்களில் இன்னும் ஒரு சுவாரசியம் பட்டம் விடுதல்... அந்த சமயங்களில் காத்தாடி சூத்திரம் தெரிந்தவர் ஒருவித பெருமையுடன் வலம் வருவார்... பட்டம் பறக்க விடுதல், தந்தி அனுப்புதல், டீல் அடித்தல் என எத்தனை சந்தோசம்...
இதை தவிர பெண்களுக்கு பல்லாங்குழி, தாயம், நொண்டி, கயிற்ராட்டம் என பல தனி விளையாட்டுக்குள்... மல்லிகை பூ மல்லிகை பூ ஓடி வந்து கிள்ளிட்டு போ.. ஆடாமல் அசையாமல் கொல்லென்று சிரிப்போம் என ஒவ்வொருவருக்கும் ஒரு தமிழ் பெயர் வைத்து விளையாடும் விளையாட்டு.... பௌர்ணமி தினங்களில் தெருவில் விளையாட்டு, மின்சாரம் இல்லாவிட்டால் தெருவில் எல்லோரும் கூடி விளையாடி, மின்சாரம் வரும் போது கூச்சலிட்டு குதூகலிப்பது... கோகுலம், சிறுவர் மலர் போன்ற புத்தகங்கள்... ஆடிக்கு ஒரு தடவையும் அமாவாசைக்கு ஒரு தடவையும் டிவியில் காட்டும் He-Man போன்ற கார்ட்டூன் தான் எங்கள் சிறு வயது சந்தோசங்கள்....
ஆனால் இன்றைய நிலைமையோ தலைகீழாக இருக்கிறது... இன்றைய குழந்தைகள் தெருவில் கூடி விளையாடும் பண்பு என்பதே இல்லை... வளர்ந்த பிறகு குழு பண்புக்கு (Group skills) வகுப்பு சேரும் நிலைமையில் இன்றைய இளைய சமுதாயம் இருக்கிறது.... செயற்கை கோள் மூலம் பல கார்ட்டூன் அலைவரிசைகள் அவர்களது வரவேற்பு அறைக்கே வந்து விடுகிறது.. இதை தவிர்த்து கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்கள், PS3 எனப்படும் பிரத்யேக விளையாட்டு, கை அடைக்க வீடியோ விளையாட்டுக்கள் இன்னும் எத்தனையோ... விளையாடும் போது கொறிக்க குர்குரே, லேஸ் போன்ற இத்யாதிகள்.... குடிக்க பெப்சி, கோக் போன்ற சமாச்சாரங்கள்.... "என் பையன் வீடியோ கேம்ஸ் புலி" " என் பொண்ணு ஒரு 500ml பெப்சி யாருக்கும் கொடுக்காமா குடிப்பா" என இதை ஆதரிக்கும் பெற்றோர்கள்.... விளைவு கண்ணாடி... உடல் பருமன்... முதுகு வலி... என சிறு வயதிலேயே டாக்டரிடம் அலைவது.... இன்றைய சட்டம் ஒழுங்கும் பிள்ளைகளை வெளியே விடும் அளவிற்கு இருக்கிறதா என்பதும் கேள்வி குறி தான்?
பாரதி சொன்னது போல ஓடி விளையாடும் குழந்தைகள் இன்று எத்தனை? இன்று பாரதி இருந்திருந்தால் "வீட்டுக்குள்ளே குழந்தையை பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள்" என பாடி இருப்பாரோ?

Saturday, February 26, 2011

நானும் சென்னையும்.....

எனக்கும் சென்னைக்கும் உண்டான பந்தம் அது மதரசாக இருந்த பொழுதே தொடங்கி விட்டது ..... 80 களில் என் அப்பா அடிக்கடி சென்னை செல்வார்.... நாங்கள் மூவரும் தூங்கிய பிறகு தான் வருவார்... ஆவின் பால்கோவா, அர்ச்சனா ஸ்வீட்சில் இருந்து பானையில் ரசமலாய், அண்ணா நகர் லாலா கடை ஜிலேபி ஆகியவை வாங்கி வருவார்.... அம்மா எழுப்பி தருவார்கள்.... மெட்ராஸ் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இது தான்.... சிறுவயதில் மெட்ராஸ் செல்வது என்றால் ஒரு தனி குதுகூலம் தான்... மெரினா கடற்கரை, LIC கட்டிடம், ஜெயப்ரதா திரையரங்கம், வேலு அசைவ உணவகம் இப்படியாக என்னை கவர்ந்த விஷயங்கள் பல.... ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது வைகைகி காம்ப்ளெக்ஸ் இல் 500 ரூபாய்க்கு ஒரு water proof பேண்ட் வாங்கி தந்தார்... அந்த காலத்தில் என் நண்பர்கள் மத்தியில் அது வெகு பிரபலம்... 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது சூளைமேட்டில் இருந்த என் அக்கா வீட்டிற்கு தனியாக செல்ல தொடங்கினேன்... அப்பொழுதான் சென்னையை meter gadge train இல் ஆராயும் வாய்ப்பு கிடைத்தது...
தேவி திரையரங்கத்தில் Speed படம், பெசன்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவில், மயிலாப்பூர், தி நகர், பூங்கா நகர் evening bazaar என பல இடங்கள் தனியாகவும் அக்காவுடனும் சுற்றி இருக்கிறேன்... கல்லூரி சேர்ந்த பிறகு கட் அடித்து சென்னை செல்வது வாடிக்கையானது.... எத்தனையோ படங்கள், ஸ்பென்சர் பிளாசா என பல இடங்கள்.... ஆனால் சென்னைக்கும் எனக்குமான பந்தம் தங்கவேலு கல்லூரி சேர்ந்து நண்பர்களுடன் வேளச்சேரியில் வீடு எடுத்தேன்.... அது வரையில் சென்னை என்ற மங்கையை பகலிலே பார்த்த எனக்கு அவளை இரவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..... அதற்குள் சென்னையில் பல மாற்றங்கள்... மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் என மாறி விட்டது.... இரவில் அண்ணா சாலையில் இரு சக்கர வாகன பயணம்... பெசன்ட் நகர் பீச்சில் இரவு 12 மணி வரை அரட்டை, brilliant tutorial எதிரில் இருக்கும் கை ஏந்தி பவன் தொடங்கி, பீச்சில் மீன் கடை, பாஷா தெரு டீ கடை, அஞ்சப்பர், காரைக்குடி செட்டிநாடு, பொன்னுசாமி , குமரகம், வாங்க்ஸ் கிச்சன், பெலிட்டா நாசி கண்டார், ஓபல் இன், என நான் போகாத உணவகங்களே இல்லை... சத்யம், அபிராமி, சிட்டி சென்டர் என திரையரங்குகள்.... வாரந்திர சென்னை டு காஞ்சிபுரம் பைக் பயணம் என என் வாழ்கையில் சென்னை ஒரு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது... இப்படி சென்னையில் இரவு பறவையாக சுற்றி கொண்டிருந்த நான் ஒரு இரவில் மலேசியா செல்லும் விமானத்தில் சென்னையை மேலே இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.... அம்மா அப்பா தங்கை நண்பர்கள் என எல்லோருடைய அழுகையை கடந்து தைரியமாக வந்த எனக்கு சென்னையின் butterfly view கதற வைத்து விட்டது....ஒவ்வொரு தடவையும் மலேசியாவில் இருந்து வரும் போது விமானம் சென்னையில் நுழையும் பொழுது கண்கள் தானாக கலங்கும்.... சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் தமிழை கேட்டால் தான் உயிரே வரும்....
சென்னையை பற்றி பல பேர்கள் தங்கள் வெறுப்பை என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.... தமிழ் படங்களில் சென்னையை ஒரு வாழ தகுதியற்ற இடமாய் சித்தரித்து கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் சென்னையில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால்... நம் கையில் பணம் இருந்தாலோ, பணமே இல்லை என்றாலும் சென்னையில் ரசிக்க, அனுபவிக்க இடங்கள் இருக்கின்றன... நான் பல நாட்கள் கையில் பத்து ரூபாய் வைத்து கொண்டு பீச்சில் உட்கார்ந்து அலைகளையும் நிலவையும் மட்டும் ரசித்து பஸ்சில் பாதியும் மீதி தூரம் நடந்தும் வீடு வந்து சேர்ந்து இருக்கிறேன்....
சென்னை புரிந்தவர்களுக்கு பூங்காவனம் புரியாதவர்களுக்கு பாலைவனம்....

Friday, February 4, 2011

நானும் நீங்களும்.....

நீங்கள் ஆக்கபூர்வமானவர்கள்....
நான் உணர்ச்சி மயமானவன்...
நீங்கள் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது
அவர்களால் வரும் ஆதாயத்தை....
நான் எதிர்ப்பார்பதோ
அவர்களின் அன்பை...
நீங்கள் காற்றை போல வீசுபவர்கள்....
எதையும் சட்டை செய்வதில்லை....
நான் காந்தம் போல ஒட்டி கொள்பவன்...
விட்டுவிட நினைத்ததில்லை......
நீங்கள் கடல் போல ஆர்பரிப்பவர்கள்
எல்லாவற்றையும் கரை தள்ளி விடுவீர்கள்.....
நான் நதி போல பாய்பவன்....
ஒரு பூவை கூட என்னோடு தூக்கி செல்வேன்.....
நான் நதி
கடலோடு சேர்வது தான் என் விதி.....

Friday, January 28, 2011

திருமண சந்தை....

திருமண சந்தையில் அதிகார பூர்வமாக 2 வருடமாக இருக்கிறேன்... என் அண்ணனோ சுமார் 5 வருடம் சந்தையில் இருந்து ஒரு வழியாக திருமணம் முடிந்தது... காதல் திருமணம் கூட இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாக இருக்கிறது... கட்டுபாடுமிக்க பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து விட்டமையால் காதல் திருமணம் என்பதை நாங்கள் கனவிலும் சிந்திக்கவில்லை... அதற்காக எங்கள் சுதந்திரமும் பறிக்க படவில்லை... என்னுடைய தோழிகள் என்னை விட என் அம்மாவிற்கு நெருங்கியவர்கள்.... நான் வேலைக்காக எத்தனையோ நேர்காணல்களை சந்தித்து இருக்கிறேன்... ஆனால் இந்த பெண்ணை பெற்றவர்கள் கேட்கும் கேள்விகளை நான் எங்கும் எதிர் நோக்கியது இல்லை...
முதலில் சுய தொழில் என்றால் நீ ஆட்டத்திலே சேர முடியாது... முதல் வடிகட்டல் இங்கேயே தொடங்கி விடுகிறது... பொண்ணு படிக்கறா இப்போ பண்றதா இல்லையே என நழுவி விடுவார்கள்... ஆனால் அடுத்த மாதமே 2000 ரூபாய் வேலையில் இருக்கும் ஒருவனுக்கு தூக்கி கொடுப்பார்கள்.. மாப்பிள்ளை நோக்கியா ல வேலை பார்க்கறாரு.... பெரும்புதூர் பக்கத்துல மினரல் வாட்டர் கம்பெனி இருக்குல அதுல வேல... பார்த்தால் அவன் நோக்கியாவில் பெட்டி செய்வான்... பாட்டிலுக்கு சீல் அடித்து கொண்டு இருப்பான்....இப்படி நிராகரிக்கும் பெற்றோர் என்னவோ பெரிய வேலையில் இருக்கிறார்கள் என நினைத்தால் அது தவறு... அவர்கள் எதோ பால் வியாபாரம் பூ வியாபாரம் என தான் செய்து கொண்டு இருப்பார்கள்... ஆனால் வரும் மாப்பிள்ளை சுய தொழில் செய்ய கூடாது...
அடுத்து ஜாதகம்... அரச மரம் ஜோசியர் தான் நல்லா சொல்லுவார்... எங்க தாத்தா காலத்துல இருந்து குளத்தங்கர ஜோசியர் கிட்ட தான் பார்க்கிறோம் என கூறி ஜாதகம் வாங்குவார்கள்... என்னது பையன் மூல நட்சத்திரமா மாமியாரை மூலையில உட்கார வச்சுடுமே... ஆயில்யமா மாமியாருக்கு ஆகாது...பூராடம் போராடும்.... ஐயையோ அந்த பையனுக்கு ஏழுல ராகு... செவ்வாய் தோஷம், நாக தோஷம் ரெண்டும் இருக்கே... இந்த பையனை கட்டினா உங்க பொண்ணு கல்யாண மண்டபம் விட்டு விதவையா தான் வருவா... ஜாதகத்துல சந்தான ப்ராப்தி இல்லையே... இப்படியாக அரசமர , புளிய மர ஜோசியர்களால் வேப்பிலை அடித்து அனுப்ப படும் பெற்றோர் நாங்க பார்த்த இடத்துல ஜாதகம் நல்லா இல்ல என்று சொல்லிவிடுவார்கள்.... ஆனால் நம் ஜாதக ரகசியத்தை ஊர் முழுவதும் பரப்பியும் விடுவார்கள்...
அடுத்து வேலை... இன்றைய பெண் வீட்டு பெற்றோர்களுக்கு, எந்த வேலையும் கண்ணுக்கு தெரிவதில்லை.... சாப்ட்வேர் மாப்பிள்ளை தான் வேண்டும்.... என்னது ஆசிரியரா? இன்போசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ் ல வேலைக்கு இருக்கற பையன் தான் வேணும்... இந்த பன்னாட்டு நிறுவன மோகம் என்பது இன்றைய பெற்றோர்களிடம் லாட்டரி, ரேஸ், குடி போல ஒரு போதையாகவே இருக்கிறது... விரிவுரையாளராக இருக்கும் பெண் கூட இன்று மென்பொருள் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் தான் இருக்கிறார்கள்... அவர்களுக்கு எல்லாம் மென்பொருள் தவிர மற்ற எல்லா வேலையும் மட்டமானது.... இதற்காக நாமெல்லாம் நாராயண மூர்த்தியாகவோ, பிரேம்ஜி மாதிரியோ ஒரு புதிய நிறுவனம் தொடங்கலாம் என்றால் நீங்கள் சுய தொழில் கிழே வந்து விடுவீர்கள் ஜாக்கிரதை... இன்னும் சிலருக்கு அரசாங்க வேலையில் போதை... திவாலி, மின் கம்பத்தில் fuse போடுகிறவர், மருந்து தெளிப்பவர் (நன்றி சுஜாதா) அவர்களுக்கு எல்லாம் பெண் கொடுப்பார்கள்... கொடுத்துவிட்டு கால் காசனாலும் கவர்மென்ட் காசு பாரு என வியாக்கியானம் பேசுவார்கள்...
இன்னும் பல இருக்கிறது... நாத்தனார் இல்லாத வீடா பாரு, மாமியார் மாமனார் வீட்ல இருக்க கூடாது, தனி குடித்தனம் இப்படியாக தொடங்கி, சொந்த வீடு இருக்கா? கார் இருக்கா?தோட்டம் தொறவு... நகை இப்படியாக கணக்கு போட்டு ஒரு நாள் பெண் பார்க்க வர சொல்வார்கள்.... பையன் விந்தி விந்தி நடக்கற மாதிரி தெரியுதே என்பார் பெண்ணின் சித்தப்பா... உடனே சித்தி மாடி படி ஏற சொல்லி பார்ப்போம் பொகிஷி தெரிஞ்சிடும்... ரகசியமாக விசாரித்தேன் பையனை அவன் வேல செய்யற எடுத்துல வெளி நாட்டுக்கே அனுப்ப மாட்டாங்களாம் என்பார் மாமா... மூக்கு சரியில்லை... போட்டோ ல கண்ணாடி போட்டு இல்லையே.... விவரம் சொல்கிறோம் என்பார்கள்... சில நாட்களில் வேலை செய்யும் இடத்தில் வந்து நிற்பார்கள்.... ஆஹா என்ன ஒரு ஆராய்ச்சி? இன்றைய பெண் வீட்டுகாரர்கள் எந்த IIM இல் மேலாண்மை பட்டம் பெற்றார்களோ? இவர்கள் வைக்கும் பரீட்சைகள் பன்னாட்டு நிறுவன நேர்காணலை விட கடினமானது....இன்றெல்லாம் ஆயிரம் உண்மை சொல்லி கூட ஒரு திருமணத்தை நடத்த முடிவதில்லை....
இப்படி தேறும் மாப்பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளோ அதிகமாக இருக்கிறது... அதன் பிறகு வரதட்சனை கேட்கிறார்கள் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.... விவாகரத்து என்பது சாதாரணம் ஆகிவிட்டது.... பெண்ணின் பெற்றோர்களே இதை ஆதரிக்கவும் தொடங்கி விட்டார்கள்... அவர்களது பெண்ணின் வாழ்கைகாக அவர்கள் இதையெல்லாம் செய்வது நியாயம் தான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால்....இதற்காக நான் ஆண் வீட்டு பெற்றோர்களை ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்...
இன்று நல்ல பையன், குணவான், நல்ல குடும்பம் என்பதெல்லாம் மறைந்து விட்டது... என்ன வேலை எவ்வளவு சாம்பாதியம் என்று தான் பார்கிறார்கள்... இரு வீட்டாரும் உங்களது எதிர்ப்பார்ப்புகளை குறையுங்கள்... விட்டு கொடுங்கள்... எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதாகவே இருக்க விடுங்கள்... சொத்துகளாலும், சொகுசுகளாலும் நிச்சயிக்க படுவதை நிறுத்துங்கள்.....

Friday, January 21, 2011

பழையன கழிதல்.....

பழையன கழிதலும், புதியன புகுதலும் சாதாரணமான நிகழ்வு... ஆனால் எனக்கு முன்னது கடினம்... புதியன புகுந்தாலும் பழைய பொருட்களை விடுவது கடினம்... இப்படி தான் பல பொருட்களை வீட்டில் சேர்த்து வைத்து இருக்கிறேன்... ஒவ்வொரு முறையும் வீடு சுத்தம் செய்யும் போது அம்மாவிற்கும் எனக்கும் பிரச்சனை வரும்... 1994 இல் வாங்கிய போகி மேளம்... பள்ளியில் தோழி தந்த நாய் பொம்மை... 1990 முதல் இன்று வரை வந்த வாழ்த்து அட்டைகள், கடிதங்கள், பள்ளிகளில் இருந்து வரும் தேர்ச்சி அட்டைகள்,ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பழைய பேனாக்கள், தலையணை, வீட்டில் வாங்கிய முதல் கேமரா.... இப்படி எத்தனையோ.... அம்மாவின் கைகளில் இருந்து இன்றுவரை போராடி காப்பாற்றி வந்து இருக்கிறேன்... மலேசியா வந்த பிறகு அம்மாவே என் ஞாபகமாக அவற்றை தூக்கி போடாமல் காத்து வருகிறாள்.... இப்படி தான் 2001 இல் வாங்கிய என் கடவுச்சீட்டு (Passport), காலாவதியாகி புதியது வாங்கி விட்டேன்....
ஆனாலும் பழைய நினைவுகள்... நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது உடன் நண்பர்கள் எல்லோரும் கடவுச்சீட்டிற்கு விண்ணபித்தார்கள்... படிக்கும் காலத்தில் விண்ணப்பிக்கும் போது கல்லூரியின் சான்று வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்... நிஜமோ எவனோ ஒருவன் கிளப்பி விட்டதோ... என் தாத்தா போலவே இருக்கும் SO விடம் போய் எல்லோரும் நின்றோம்... படு கோபக்காரர் அவர்... உள்ளூர் ல ஓணான் புடிக்க முடியலையாம் இவனுங்க அசலூர் ல அரனை புடிக்க போறாங்க என திட்டி கொண்டே அந்த சான்றை கொடுத்தார்... நான் விண்ணப்பிக்கும் முன் என் அண்ணா இரண்டு மூன்று தடவை தபாலில் அனுப்பி, இது இல்லை அது இல்லை என்று திரும்பி வந்து விட்டது... அதனால் எனக்கு எவை எவை அவசியம் என்று தெரிந்து இருந்தது...மற்ற நண்பர்கள் தரகர் மூலம் சென்ற போதும், நான் எதோ ஒரு குருட்டு தைரியத்தில் எல்லாவற்றையும் தயார் செய்தேன்.... தபால் அலுவகத்தில் 20 ரூபாய் விண்ணப்பம், 300 ரூபாய் வரைவோலை... பதிவு தபால் செலவு 20 ரூபாய்.. இவ்வளவு தான்... மூன்று மாதம் கழிந்தது.... காவல் காரர் ஒருவர் வீடு தேடி வந்தார், அப்பா அக்கம் பக்கம் இரண்டு வீடுகளில் கடிதம் வாங்கி கொடுத்தார்... சொல்ல வேண்டுமா உடன் 50 ரூபாய்... மூன்றே நாட்களில் எனக்கு பிடித்த நீல நிற உறையில் கடவுச்சீட்டு வந்தது.... ஒரு நூறு முறை பிரித்தும் முகர்ந்தும் பார்த்தேன்.... காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து அர்ச்சனை... இன்னும் அந்த குங்கும சுவடு இருக்கிறது... எனக்கு கிடைத்த பிறகு என் அண்ணா, நண்பர்கள் சிலர் என் அறிவுரையின் பேரில் இதே முறையில் கடவுச்சீட்டு பெற்றார்கள்... நான் வாங்கிய சில நாட்களிலே கட்டணம் ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது... இதெல்லாம் ஒரு பெருமையாக கருதிய காலங்கள் அவை.... அப்புறம் அது பீரோவிலே பல வருடம் இருந்தது... ஒரு முறை வோட்டு போட பந்தாவாக எடுத்து போனதோடு சரி....
2008 இல், மலேசியா பல்கலைகழக நேர்முக தேர்வின் போது தான் நீல உறையில் இருந்து மீண்டும் எடுத்தேன்.... அது நடந்து ஒரு மாதத்தில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது... விசா போடா கடவுச்சீட்டை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்... எங்கும் காணவில்லை... அப்பொழுது வேளச்சேரியில் தனியாக இருந்தேன்... அப்பாவிடம் சொன்னால் அவர் வீணாக அலட்டி கொள்வார்... தங்கையிடம் மட்டும் சொல்லி வீட்டில் தேட சொன்னேன்... நானும் என் வீட்டில் தேடினேன்... அதற்குள் ஒரு வாரம் ஆகி விட்டது... மூன்று முறை தரகரிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.... வீட்டையே புரட்டி போட்ட பொழுது, முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின்பு இருந்தது... வேளச்சேரியில் மழையின் போது வீடெங்கும் தண்ணீர் ஊரும்... அதற்கு பயந்து கண்ணாடி பின் வைத்தது நினைவிற்கு வந்தது... சுவரிலும் நீர் ஊறி, நீல நிற உறையை பதம் பார்த்து விட்டது... அன்று தான் 7 வருடமாக இருந்த அதற்கு பிரியா விடை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது (பழையவற்றை காப்பதில் ஒரு பயன் பாருங்கள்). நீல உரையால் என் கடவுச்சீட்டு மிக மோசமான ஆபத்தில் இருந்து மீண்டது... ஆனால் மிகவும் அழுக்காக காட்சி அளித்தது....
இந்த 7 வருடத்தில் அது மட்டுமா மாறியது... காலத்திற்கு என் மேல் என்ன காழ்ப்புணர்ச்சியோ, நீல வாக்கில் வளர்க்காமல் அகல வாட்டில் வளர்த்து விட்டது... அந்த கடவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்திற்கும், எனக்கும் சம்மந்தமே இல்லாமல் போய் விட்டது... அப்படியும் இந்த கடவுச்சீட்டை வைத்து கொண்டு 10 முறை மலேசியா சென்று வந்து விட்டேன்... ஒவ்வொரு முறையும் குடியேறல் அதிகாரிகள் கடவுச்சீட்டின் புகை படத்தை பார்த்த உடன், திறமையாக அம்மா பேரு சொல்லு.... அட்ரஸ் சொல்லு ன்னு எதாவது காமெடி செய்வார்கள்... என்னிடம் பான் கார்ட் இருக்கிறது, அடையாள அட்டை இருக்கிறது என்றால் முறைத்து விட்டு, கேட்டதற்கு பதில் என்பார்கள்... அம்மா பெயரையும், முகவரியும் சொன்னால் கையில் கிடைக்கும் பக்கத்தில் முத்திரையிட்டு அனுப்பி வைப்பார்கள்... அவ்ளோ தூரம் அதை வைத்து வந்தவன், அதிலிருக்கும் அம்மா பெயரையும், முகவரியையும் படிக்காமலா வந்து இருப்பான்... என்னவோ நம் குடியேறல் அதிகாரிகள் பற்றியே தனியாக ஒரு பதிவு செய்யலாம்.... ஒரு முறை விமானநிலையத்தில் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் கடவுச்சீட்டை கிழே போட்டு விட்டு சென்று விட்டேன்... யாரோ எடுத்து தந்தார்கள்... வீட்டுக்கு சென்றால் அப்பாவிடம் அதை எரிந்து விடுவேன்... மீண்டும் திரும்பி வரும் நாளில் தான் தொடுவேன்....
இப்படியாக என்னுடன் இருந்த A9554856 க்கு பத்து வயதாகி விட்டது.... நம் ஊரிலே அதை புதிப்பிக்க எடுத்த முயற்சிகள் என்னுடைய 20 நாள் விடுமுறையில் முடியவில்லை.... சாஸ்திரி பவனை மூன்று முறை சுற்றி வந்து தான் உள்ளே செல்ல முடியும்... அவ்ளோ கூட்டம்.... இங்கு வந்த உடனே அதற்கான முயற்சிகளை தொடங்கினேன்.... இந்திய தூதரகத்து சென்று அதற்கான விண்ணப்பம் அளித்தேன்... இந்திய தூதரகம் மலேசியாவில் ஒரு சின்ன இந்தியா... மலேசியாவில் காண முடியாத கூட்டம்... எரிந்து விழும் அதிகாரிகள்... அலறும் குழந்தைகள்.... சண்டையிடும் பெண்கள்... சாமர்த்தியமான ஆண்கள்... பழங்காலத்து சிரஞ்சீவி படம்... ஜோடி ராதா என்றால் பார்த்து கொள்ளுங்கள்.... பழுதான எண் அறிவிப்பு பலகை..... என ஒரு இந்தியா மாதரியே இருந்தது... அன்று விண்ணப்பம் உடன் என் பழைய கடவுச்சீட்டை பெற்று கொண்டார்கள்... மூன்று நாளில் புதிய கடவுச்சீட்டும், என் பழைய கடவுச்சீட்டை சிறிது வெட்டியும் தந்தார்கள்.... பழைய கடவுசீட்டையே பார்த்து கொண்டு இருந்தேன்.... அன்று இரவு அதை பற்றிய நினைவுகளை அசை போட்டேன்... விளைவு இந்த பதிவு...
கீட்ஸ் ஒரு கவிதையில், ஒரு அழகான பொருள் காலமெல்லாம் இன்பம் தரும் என்கிறார்....எனக்கோ ஒவ்வொரு பழைய பொருட்களின் பின் இருக்கும் எதோ சிறு நினைவுகள் காலமெல்லாம் இன்பம் தரும்.... பழையன கழிதல் மூளை ஆளுநர்களுக்கு (Mind rulers) பகட்டு.... பழையன கழிதல் இதய ஆளுநர்களுக்கு (Heart Rulers) பதிவு.....


Wednesday, January 19, 2011

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்......

அயல் தேசத்து வாழ்க்கை பற்றிய ஒரு கருத்து என்னை மிகவும் யோசிக்க வைத்தது... என்னுடைய பதிவு குறைகளை மட்டுமே சொல்வது போலவே இருக்கிறது என்பதே அந்த கருத்து... ஆம்... இங்கு நிறைகளும் இருக்கின்றன... முதலில் மக்களின் மனப்பாங்கு... அவர்கள் எங்குமே வேண்டுமென்று குப்பை போடுவதில்லை... அசுத்தம் செய்வதில்லை... தேடி குப்பை தொட்டியில் தான் போடுவார்கள்... அவர்கள் நாட்டின் மேல் எல்லோருக்கும் ஒரு பற்று இருக்கிறது... மேலும் எல்லா இடங்களிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது... வங்கி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எல்லாவற்றிலும் மக்கள் தங்கள் முறைக்கு பொறுமையாக காத்திருப்பார்கள்... திறமையாக வரிசையில் நுழையும் மக்கள்... யார் குரலுக்கும் கட்டுபடாமல் நேராக செல்லும் நபர்கள் எல்லாம் இங்கே பார்ப்பது அரிது....
மலேசியாவில் கடும் மழை பொழியும்... மழை நின்ற சில மணி துளிகளில் தண்ணீர் சென்ற இடம் தெரியாது..... மழைக்கு விடுமுறை இங்கு கிடையாது... என் நம் நாட்டில் மட்டும் எப்படி.... ஹரப்பா மொஹிஞ்சதரோ காலத்திலே வடிகால் வசதிகளில் முன்னேறி விட்டதாக வரலாற்றில் படிக்கிறோம்... ஆனால் நிஜமோ வேறு மாதரியாக இருக்கிறது... மழை காலங்களில் மக்கள் மீன்களை போல நீந்த வேண்டி இருக்கிறது...
மரங்களுக்கு இங்கு தரும் மரியாதை அதிகம்... முதல் முதலாக மலேசியா வரும் எல்லோரையும் கவரும் ஒரு அம்சம் இதன் பசுமை தான்... எங்கு பார்த்தாலும் மரங்கள், பூ செடிகள் என நெஞ்சை அள்ளும்... இங்கெல்லாம் செம்மொழிக்காக கூட பசுமைகள் அழிக்க படுவதில்லை.... இன்டர்நெட் இருந்தால் போதும்... எல்லாமே செய்து விடலாம்... மின்சாரம், தொலை பேசி, தண்ணீர், சாக்கடை வரி என அத்தனை கட்டணங்களும் இணையதளத்திலே கட்டி விடலாம்... மொபைல் போன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்... பதிவு அலுவலகங்களில் திருமண தேதி கூட பதிந்து கொள்ளலாம்.... காரில் இருந்து கொண்டே சுங்க சாவடிகளில் பணம் செலுத்தும் அட்டை, ரயில், பேருந்துகளில் பயண சீட்டு வாங்காமல் நேரடியாக பணம் கழிக்கும் தானியங்கி அட்டைகள் (smart cards) எல்லாம் கிடைக்கிறது.... இது போன்ற வசதிகளுக்கு மென்பொருள் எழுதுவது எப்படி இருந்தாலும் இந்தியராக தான் இருப்பார்... ஆனால் இத்தகு வசதிகளை இந்தியா முழுவதும் ஒரே அடியாக கொண்டு வர அரசாங்கத்துக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்... மாநகரங்களுக்கு இந்த வசதி வருகிறது வெகு விரைவில் நாடெங்கும் என செய்திகள் தான் வருகிறது ... நடைமுறைக்கு வருவதில்லை... ஒரே நாளில் நம் வேலை முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் அரசாங்க அலுவலகங்களுக்கு நம் நாட்டில் செல்ல முடியாது... ஆனால் இங்கு அது சகஜம்... Annexure Z1 ல இருக்கிற பத்திரம் எங்கே என இது வரை நான் சென்ற இடங்களில் கேட்டது இல்லை...
கல்வி நிலையங்களில் இங்கு காணப்படும் வசதிகள் மட்டும் நம் நாட்டு மாணவர்களுக்கு கிடைக்குமாயின், இந்திய மக்கள் உலகெங்கும் இதை விட அதிகம் பிரகாசிக்க முடியும்... எல்லா வகுப்பறைகளிலும் LCD projector, குளிர்சாதன வசதி, இணையத்தளத்தில் பாடம் சம்பந்தமான குறிப்புக்கள், அவர்கள் குறைகளை பயமின்றி எடுத்துரைக்கும் சுதந்திரம், செயல் முறையுடன் கூடிய பாடங்கள் என அவர்களுக்கு தனியார் கல்லூரிகளும் அதை விட அதிகமாக அரசாங்க கல்லூரிகளும் போட்டி போட்டு கொண்டு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கின்றன.... என் தங்கவேலு மாணவர்கள் இங்கு இல்லையே என பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன்.....
இங்கு வசதிகள் அதிகம்... சுகம் அதிகம்... சொகுசு அதிகம்.... மின்னிடும் அலங்கார விளக்குகளை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி நெஞ்சை அள்ளி போவதில்லையா? பகட்டான பலர் இருந்தாலும், அம்மாவை தேடி ஓடும் குழந்தையை போல... என் மனம் இதிலெல்லாம் ஒட்டாமல் நம் நாட்டின் மீது செல்வது இயற்கை தானே.... தாயையும் தாய் நாட்டையும் கேலி பேசி கொண்டு இந்தியா என்றாலே முகம் சுளிக்கும் பல வேடிக்கை மனிதர்கள் போல் நானும் அயல் நாடு மோகத்தில் வீழாமல் பார்த்து கொள் என் ஆண்டவா......

Monday, January 17, 2011

அம்மா சமையல்

வைரமுத்துவின் அம்மா கவிதையின் பாதிப்பு தான் என் அம்மா சமையல்... அவர் அம்மாவை பற்றி முழுவதும் சொன்னார்... நான் சமையலை பற்றி மட்டும் தொட்டுவிட்டு சென்று இருக்கிறேன்...

Sunday, January 16, 2011

அயல் தேசத்து வாழ்க்கை....

2008 மே மாதம் மலேசியா வந்தேன்... இது தான் என் முதல் வெளிநாட்டு பயணம்... ஜெட் விமான பயணம் புதுமையாக இருந்தது... வீட்டு பறவையாக, செல்ல பிள்ளையாக, சொந்தம் பந்தம் என பழகிவிட்ட எனக்கு தொடக்கம் முதலே இந்த வாழ்க்கை நரகமாகவே இருந்தது... கிட்ட தட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்ட பின்னும் இன்னும் இந்த வாழ்கை ஒட்டவில்லை... சரியாக 21 மாதங்களில் 6 முறை இந்தியா சென்று வந்திருக்கிறேன்... வேலை நாட்களில் நேரம் சரியாக இருக்கும்... அதுவும் வீட்டுக்கு வந்து விட்டால் தலை வலியோ, உடல் வலியோ நாம்தான் காபி போட வேண்டும்.. வெளி உணவு சிறிது நாளைக்கு சுவைக்கும்.. அதன் பிறகு இந்த தென் இந்தியர்களின் சாபம் போலும் ... இட்லி தோசைக்கு மனம் ஏங்கும். துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், கூட்டல் பெருக்கல் என அம்மாவின் அருமை தெரிய ஆரம்பிக்கும்..
இதில் வீட்டை உடன் பகிர்வோர் வேறு... நீ அதிகம் சப்பாத்தி தின்றாய், ஹீட்டர் நிறுத்த மறந்து விட்டாய், நான் துவைக்கும் நாளில் நீ துவைக்காதே என்ற அர்ச்சனைகள்... அந்த கடையில் இட்லி கிடைக்கிறது... அந்த இடத்தில பொருட்கள் 50 சென் கம்மி... அங்கு சென்றால் krakjack பிஸ்கட் கிடைக்கும் என்ற அறிவுரைகள்.. தினம் தினம் இயந்திரம் போன்ற வாழ்க்கை... வீட்டிற்கு போன் செய்வது ஒரு திருநாள் போல தான்... காலிங் கார்ட் கிடைக்கும்... 15 டாலர்ஸ் க்கு 200 நிமிஷம்... அதிலிருந்து கால் செய்வதற்குள் உயிரே போய் விடும்... முதலில் அவர்கள் கஸ்டமர் கேர் க்கு போன் செய்ய வேண்டும்... அது நமக்கான தொகையை அறிவிக்கும் அதன் பிறகு உங்கள் எண்ணை அழுத்த சொல்லும்... எண் மனப்பாடமாக இருந்தால் தான் இந்த கட்டத்தை தாண்ட முடியும்.. இல்லை என்றால் பெயில்.... மீண்டும் எண்ணை நோண்டி மனப்பாடம் செய்து மீண்டும் முதலில் இருந்து வர வேண்டும்.... வெற்றி பெற்றால் நமக்கான நிமிடங்களை சொல்லும்... அதன் பிறகு இணைப்பு கொடுக்க படும்... சில சமயம் தவறான எண்ணுக்கு போய் விடும்... சில சமயம் நம் இந்திய மக்கள் எடுக்க மாட்டார்கள்... அப்படியே பேசினாலும் இரவு செய்யேன் ரொம்ப நேரம் பேசலாம் என்பார்கள்... சனி ஞாயிறில் கஸ்டமர் கேர் எண் கிடைப்பதே அரிதாகிவிடும்... இங்கும் உடன் வசிப்போர், தெரிந்த இந்தியர்களின் தலையீடு வேறு ... பவர் இந்தியா வா அது 200 நிமிஷம் தான் வரும் சார்... தாஜ்மஹால் கார்ட் 205 நிமிஷம் வருமே... எந்த கார்டில் செய்தாலும் என் அப்பா அம்மாவிற்கு சரியாக கேட்டதாக சரித்தரம் இல்லை... எதோ உத்தேசமாக தான் பதில் சொல்வார்கள்....
வேலை செய்யுமிடத்தில் எவ்ளோ தான் நேர்மையாக உண்மையாக உழைத்தாலும் நம்மை அந்நியர்களாகவே பார்ப்பர்.... பேருந்து ஓட்டுனர், வாயில்காவலன் கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.... இங்கு குடிமக்களாக இருக்கும் இந்தியர்களின் அதப்போ அந்நியர்களை விட அதிகம் இருக்கும்.... இதை எல்லாம் விட வங்கி, டிக்கெட் எடுத்தல், வருமான வரி எங்கு சென்றாலும் கடவு சீட்டை (passport) கேட்பார்கள்.... எதோ என் பிறப்பை சந்தேக்கிற மாதிரி உணர்வேன்....
எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தார் போல வரும் இந்திய பயணம்.... டிக்கெட் எடுத்த நாளில் இருந்து நாட்களை எண்ண தொடங்கி விடுவோம்... ஊரில் உள்ள எல்லோருக்கும் எதாவது ஒரு பொருள் தேடி வாங்குவோம்.... இந்தியா சென்ற உடன் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம்... பயணத்திற்கு முன் நாள் தூக்கம் வராது... இந்திய சென்ற இரண்டு நாள் எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும்.... அயல் நாட்டு வாழ்க்கையுடன் தொலைந்த இந்திய நண்பர்கள்... அவர்களது போகாத திருமணங்கள்... உறவினர்களின் மரணம்... குழந்தை பிறப்பு... என்னிடம் பட்டும் படாமல் அண்ணனிடம் அவர்கள் செய்யும் கலாட்டா.... வீட்டு குழந்தைகளின் அந்நியம்... நண்பர்களின் நேரமின்மை... இவை எல்லாம் மெதுவாக தாக்கும்.... ஒரு நண்பனை பார்த்து விட்டு வந்தால் மறு நண்பனின் கோபம் தாக்கும்.... எல்லோருக்கும் எதாவது வாங்கி சென்றாலும் அதிலே அதிருப்தி.... கிடைக்காதவர்களின் ஏக்கம்... ஆனால் இது வரை நான் வந்தது தெரிந்து என்னை வந்து பார்த்த நண்பர்கள் குறைவு... அவர்களை வந்து பார்க்கவில்லை என்று சொன்ன நண்பர்கள் அதிகம்... எனக்காக எதுவும் வாங்கி வரவில்லை என்போர் அதிகம்... நீ இல்லாத தீபாவளிக்கு நான் வாங்கி வைத்த உடை இது, பொங்கலுக்கு உனக்காக எடுத்த சட்டை என்று என் அம்மா கூட சொன்னது இல்லை.... வீட்டில் உள்ளவர்களே இப்படி என்றால் அடுத்தவர்களை என்ன சொல்ல??? வீட்டில் இருந்து மீண்டும் வெளிநாடு செல்லும் நாள் இருக்கிறதே கொடுமை? ஆயிரம் ஈட்டிகள் குத்துவது போலவும்... யாரோ தொடர்ந்து சுடுவது போலவும் இருக்கும்... நரகம் சாவு இவற்றை உயிரோடு அனுபவித்து விடுவோம்.... இங்கு வந்த சில நாட்கள் தூங்கி எழுந்தால் பக்கத்தில் அம்மா இருப்பது போலவும், இந்திய வீட்டில் இருப்பது போலவும் உணர்வோம்...
அம்மாவின் ஸ்பரிசம், அப்பாவின் அறிவுரை, அண்ணன் தங்கைகளின் பாசம், குழந்தைகளின் குதுகூலம், நண்பர்களின் கலாட்டா, உறவினர்களின் நெருக்கம், தெருவோர இட்லி, டீ கடை தேநீர், பண்டிகைகள், திருநாட்கள், வேகமான பைக் பயணம், மழைக்கான விடுமுறை, சகதியான சாலை, வியர்த்து விடும் வெயில், பேருந்துகளில் பயணிக்கும் சுகம், மஞ்சள் தடவிய மங்கள முகம், மதிக்கும் மாணவர்கள்... எச்சில் சாப்பாடு... 20 ரூபாய் கோழி பிரியாணி... கடக்கும் ரயில்... துரத்தும் தெரு நாய்... கடற்கரை சுண்டல்... மிளகாய் பொடி போட்ட மாங்காய்... இப்படி இழந்ததை யோசிக்கும் போது நாங்கள் இங்கு சம்பாதிப்பதும் குறைவு தான்.... NRI என்பது என்னை பொறுத்த வரை Non Residing Indians இல்லை... Non-stopingly Remembering India தான்.... தினம் எழுந்தவுடன் வயிறு நிரம்பி விடும் என ஆண்டவன் படைத்தது இருந்தால் என்னை போன்றோர் இது போல கவலை பட தேவை இருக்காது... அயல் தேசத்து வாழ்க்கை என்பது அடுத்தவர்களுக்கு வியப்பு... வாழ்பவர்களுக்கோ வெறுப்பு....

Thursday, January 13, 2011

தை பொங்கல்....

தை பொங்கலன்று முதல் முதலாக என் கருத்து பதிவை தொடங்கி இருக்கிறேன். பொங்கல் என்ற திருநாள் எனது சிறு வயதில் மிக மிக விரும்பிய ஒன்று. என்னை பொறுத்தவரை தீபாவளியை விட பொங்கல் திருநாள் காஞ்சீபுரத்தில் வெகு சிறப்பாக கொண்டாட படும் ஒன்று. இன்று மேற்கத்திய கலாச்சாரம் தாக்கத்தால் பொலிவு இழக்கும் திருநாட்களில் உழவர் திருநாள் முதலிடம் வகிக்கிறது என்றால் மிகை ஆகாது.. ஜனவரி ஒன்றை கொண்டாடும் நம் இளைஞர்களுக்கு பொங்கல் என்பது விடுமுறை, சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி என்ற கண்ணோட்டத்தில் சுருங்கி விட்டது... என் தலைமுறை ரசித்த அளவிற்கு கூட இந்த திருநாள் இல்லை...
போகி என்றால் நாங்கள் சிறுவர்கள் எல்லோரும் மூன்று நாட்கள் முன்பு ஒரு பழைய பாயில் கயிற்றை கட்டி, மேளம் தட்டி கொண்டு அனைவர் வீட்டுக்கும் சென்று பழைய பொருட்களை சேகரிப்போம்... அதற்கு இரவு காவல் பகல் காவல் என்று காவல் காத்து, தூங்காமல் போகி அன்று விடியற்காலையில் கொள்ளுத்துவோம்... இவற்றால் என்ன பயன் என கேட்கலாம்? குருடர்களுக்கு பார்வையின் அருமை தெரியாதது போல தான்... ECR ride, Multiplex theatre, Express avenue,PUB, I20 என சென்று விட்ட இளைஞர்களுக்கு இவை எல்லாம் புரியாது...
வீட்டில் மளிகை சாமான்கள் அரிசி பருப்பு போன்றவை வருடம் ஒரு முறை பொங்கலுக்கு தான் வாங்குவார்கள்... தை மாதம் அனைத்தும் விலை குறைவாக கிடைக்கும்... அதை சேமித்து வைக்க ஆளுயர பானைகள் வீட்டில் இருக்கும்.... அவைகளை துடைத்து பொட்டு வைத்து, விவசாயிகள் கொண்டு வரும் பிரமனை என்பதில் மேல் வைப்பார்கள்... பிரமனை என்பது வைக்கோலில் செய்யபடுவது... இன்று அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரம் வந்த பிறகு பிரமனை செய்யும் அளவுக்கு நீளமான வைக்கோல் கூட கிடைப்பதில்லை.... பிரமனையும் எவர் சில்வேரில் சரவணா ஸ்டோர்ஸ் கிடைக்கிறது... பானை பொங்கல் வழகொழிந்து குக்கர் பொங்கல் வந்து விட்டது...
இளைஞர்களிடம் பீப் என்பது சாதாரண உணவாகிவிட்ட பின் மாட்டு பொங்கல் என்பது மற்றவர்களை கிண்டல் செய்வதற்காக மட்டுமே பயன்படுகிறது... மச்சி நமக்கு எல்லாம் பொங்கல் டா அவனுக்கு மாட்டு பொங்கல் தானே டா என்பது சாதாரணம் ஆகிவிட்டது... பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் பழக்கம் பொங்கலில் முக்கிய நிகழ்வு... எத்தனை பேருக்கு இது இன்று தெரியும் என்பதே மிக பெரிய கேள்வி....
valentines day, mothers day, fathers day, friendship day என்று கொண்டாடும் நம் மக்கள் நமது பழைய கலாசார பண்டிகைகள் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறார்கள்... வெளிநாட்டில் வசிக்கும் வடநாட்டவர்கள் சந்தித்து கொண்டால் ஹிந்தியில் பேசி கொள்கிறார்கள்... ஆனால் தமிழர்கள் ஆங்கிலத்தில் தான் ஆனந்தம் அடைகிறார்கள்... தமிழே தடுமாறி கொண்டு இருக்கும் போது தமிழர் திருநாள் கதி என்ன...
இன்று மக்கள் நோக்கியா, எச்போர்ட் கார்மெண்ட்ஸ் போன்றவற்றில் தான் வேலை செய்ய விரும்புகிறார்கள்... அதை தான் சமுதாயமும் மதிக்கிறது... விளை நிலங்களும் ரியல் ஈஸ்டடேக்கு பலி ஆகிவிடுகிறது.... விவசாயம் விவசாயி என்றால் முகம் சுளிக்கும் இந்த சமூகம், நாளை கையில் பணத்தை வைத்து கொண்டு அரிசிக்காக அல்லல் படும் நிலை வரத்தான் போகிறது.... விவசாயம் வளர எந்த அரசாங்கமும் திட்டங்கள் எதையும் வகுப்பதில்லை.... விவசாயத்திற்கு உலை வைத்துவிட்டு உழவர் திருநாள் கொண்டாடுவதில் என்ன பயன்? Happy Pongal என்று வாழ்த்து கூறி தமிழர் திருநாள் கொண்டாடுவதில் என்ன பயன்? ஊர் கூடி தெருவில் பானையில் பொங்கல் இடாமல், கடமைக்காக குக்கர் பொங்கல் வைத்து கொண்டாடுவதில் என்ன பயன்?