Saturday, July 13, 2013

ஆறாவதுமகன்

சாரதா அத்தைக்கு ஒரு இரங்கற்  பா...

நினைவு தெரிந்த
நாள் முதல்
நீ என் தோழி...

சிறு வயதில்
அம்மாவுடன் சுற்றியதை விட
அத்தை அத்தையென
எத்தனையோ இடங்கள்
உன்னுடன் வந்தது தான்
நினைவிருக்கிறது....

அருணா தியேட்டர்
ஆட்டோமேடிக் திரைச்சீலை....
ஆரணி ஆற்று குளியல்
அறிமுகப்படுத்தியது  எல்லாம்
நீதானே.....

காலை உன் வீட்டில்
ஹிந்தி...
நேரம் போவதே
அறியாமல் ஆடும்  தாயம்....
மாலை நேரத்தில்
உன்னிடமே படிப்பு....
இரவில் ஆடும் சீட்டு கட்டு...
இப்படி என் விடுமுறை முழுவதும்
நீயே ஆக்கிரமித்து கொண்டாய்....

தெருப்பாடகன் படம்
புதுப்பாடகன் ஆகி
ஏகாம்பரநாதர் கோவிலில்
படமெடுக்க....
காலாற கோவில் வரை நடத்தி
பின்னிரவில்
வெண்ணிற அமலா காட்டியது.....

அரட்டை அடித்து கொண்டே
ஆஸ்பத்திரி  மூலை சென்று
வெள்ளி தேர் பார்த்தது...

பத்தாவது வரை
பரீட்சைக்கு உன்
பாதம் வணங்கியது....

பலப்பம் ஆணி கொண்டு
காம்பஸ் போல செய்து
நீ இட்ட
பொங்கல் பானை கோலம்...
சுமதி வரை நீ
செய்த திருமண அலங்காரங்கள்...
சீமந்த
பூ ஜடைகள்....

உடல் பரிசோதனைக்காக
ஒவ்வொரு மாதமும்
தொடர் வண்டியில்
அப்பல்லோ சென்றது....

இன்னும்
இதுபோல
இன்பமான நினைவுகள் பல....

இதய நோய்...
பக்கவாதம்...
எதுவும் உன்
தன்னம்பிக்கையை
தளர்த்தியது இல்லை

பண கஷ்டமோ
மகன் தொல்லையோ...
உன் சுறுசுறுப்பை
குறைத்ததில்லை....

உடல் நலிந்த போதும்
உன் உதவி மனப்பான்மையை
உதறியதில்லை....

 அரசாங்க மருத்துவமனையோ
அப்பல்லோ ஆஸ்பத்திரியோ
உன் மன உறுதியை
உருக்குலைத்ததில்லை....

என் அண்ணன் தங்கை
உன் மகளுடன்
உறவாக இருப்பது
அவர்களாக ஏற்படுத்திக்கொண்ட
நட்பு
எனக்கும் அவளுக்குமான
உறவோ
உன் ஆறாவது மகனாக நானாகி
உண்டான
உடன் பிறவா சகோதர
உறவு

மலேசியா செல்லும்
ஒவ்வொரு முறையும்
நீ இந்தியாவில் இருக்கும் போதுதான்
மரிப்பேன் என்றாய்...
அதை நிரூபித்தும்
காட்டி விட்டாய்....

எதோ ஒரு
புள்ளியில் உன்னுடன்
ஒரு இடைவெளி...
உரசலோ புரசலோ
சண்டையோ சச்சரவோ
எதுவும் இல்லை...
இருந்தாலும் வந்துவிட்டது
இடைவெளி...

மாலை ஐந்து மணிக்கு
பாசமாக பேச அழைத்தாய்....
பிறகு வருகிறேன் என
பறந்து விட்டேன்....
காலை ஐந்து மணிக்கு
காலமாகி விட்டாய்.....

மரணம் உணர்த்தும் வரை
மற்றவர்கள் அருமை
மனிதர்களுக்கு புரிவதில்லை.....

ஒவ்வொரு மார்கழியும்
உனக்கு மறுபிறப்பு...
கால் நூற்றாண்டு
காலனுடன் போராடி விட்டாய்...
கடைசியாக தான் உன் வாழ்வில்
கிடைத்தது ஓய்வு....

உன் போல
பிறந்த வீட்டின் மீதான
குறையாத பாசமும்
புகுந்த வீட்டின் மீதான
அளப்பரிய விசுவாசமும்
இன்றைய பெண்களிடம்
இம்மியளவும்
இருக்க போவதில்லை.....

தன்னம்பிக்கையின்
தாயே...
உழைப்பின்
உறைவிடமே...
ஊக்கத்தின்
உதாரணமே....

உன்னை போல ஒருவளை
உலகெங்கும் காணப்போவதில்லை....
உலகை விட்டு நீ சென்றுவிட்டாய் என்ற
உளறலையும் நம்பபோவதில்லை....

தைரியமான பெண்களிலும்....
சோர்வடையா உழைப்பாளிகளிடமும்...
புதுமையான கோலங்களிலும்....
நேர்த்தியான ஆலங்காரங்கலிலும்...
நீ எங்களுடன்
வாழ்ந்து கொண்டுதானே
இருக்கப்போகிறாய்.....