Wednesday, August 29, 2012

தந்தையாக பிறந்தேன்......

(இன்று ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொண்டேன்... மதிய வேளை... சாப்பிட்ட  அசதி... தூங்காமல் இருக்க எழுதிய கவிதை.... ஒரு மணி நேரத்தில் எழுதியது.. கருத்துக்கள் அவசியம் தேவை...)

நீ கருவாகும் முன்னே
என் கற்பனையில் உருவானவள்.....
நான் மணமாகும் முன்பே
என் மனதில் மகளானவள்....
நீ பிறப்பதற்கு முன்னே
மைதிலி ரங்கநாயகி என பெயர் கொண்டவள்....
கை பிடித்ததும்...
கட்டில் இட்டதும்...
கடல் கடந்ததும்....
பெண் பிறக்கும் என
பெரியோர் குறித்த நேரத்தில் தான்....
என் மனக்குதிரை
லாடம் கட்டப்பட்டு
உன்னை நோக்கியே பயணப்பட்டிருந்தது....
மனைவியை கூட
மகள் சுமக்கும்
மகராசியாய் தான் பார்த்திருக்கிறேன்....
பெண் பித்து பிடிக்க வேண்டிய சமயத்தில் கூட
பெண் பிள்ளை பித்து பிடித்து அலைந்திருக்கிறேன்....
என் கணக்கில் ஆறாவது வாரம்
நீ இருப்பதாய் கண்டு கொண்டேன்...
ஏழாவது வாரம்
ஒரு சிறு புள்ளியாய் படம் பிடித்து
நீ இருப்பதை உறுதி செய்தார்கள்....
புள்ளி, பட்டாணி, கோலி,
கத்திரிக்காய் போல...
வாரா வாரம்  வளர்ந்து வந்தாய்....
விதி வசத்தால் உன்னை
விட்டு பிரிந்திருந்தாலும்
உள்ளத்தால்
உன்னுடனே மட்டுமே இருந்தேன்.....
ஜோதிடமும்...
சீன கணக்கும் நீ
ஆண் தான் என
ஆணித்தரமாய் உரைத்தது....
உன் அம்மாவின்
முகம் கறுத்துவிட்டது ...
மூக்கு பெருத்துவிட்டது...
ஆண் தான் பிறக்குமென
ஆளுக்கு ஆள்
அடித்து கூறினார்கள்.....
விஞ்ஞான வளர்ச்சியால்...
முப்பத்தி இரண்டாம் வாரம் உன்
முகம் பார்க்க முடிந்தது...
நீ முகம் சுளித்ததும்...
வாய் குவித்ததும்....
பாரதிராஜா கதாநாயகி போல
முகம் மூடியதும்....
சிலிர்த்து போனேன்....
அந்த நாளும் வந்தது...
உலகை நீ காண
உன் அம்மா உடல் வலி பொறுத்தாள்...
நான் அன்று பட்ட
மன வலியும்... பயமும்...
என் வாழ்நாளில் ஒரு நாளை  குறைத்திருக்கும்...
என்னை பெற்றவளும்...
உடன் பிறந்தவளும்...
உடன் பிறக்காத உற்றவனும்...
துணையாய் எனக்கிருக்க...
பதினாறு மணி நேர
போராட்டத்திற்கு பின்னே...
அழகாய் ஒலித்தது உன் அழுகை....
அழுத்தமாய் நீ
அழும் போதே
அறிவித்து விட்டேன் நீ பெண் என்று...
அதையே உறுதி செய்தால் தாதி....
முதன் முதலாய் அத்தையின்
கைகளில் உன்னை கொடுத்த பொழுது...
உன் முகம் பார்க்க துடித்தாலும்...
உனை கைகளில் ஏந்த தவித்தாலும்....
உன்னை ஈன்றவளின்
முகம் முதலில் காண்பதே
முறை என்று பொறுத்திருந்தேன் .....
முதலில் அவளை கண்டதும்
முத்தம் ஒன்று அழுத்தமாய் தந்தேன்...
மொத்தத்தையும் அதுவே உணர்த்திவிட்டது....
கண்ணீரும் மௌனமாய் நிமிடங்கள்
கரைந்தது....
கடைசியில் உன்னை என்
கைகளில் தந்தார்கள்....
தில்லி என உனை செல்லமாய்
அழைத்து கொண்டேன்....
அழுது கொண்டேன்...
அணைத்து கொண்டேன்....
சிலிர்த்து போனேன்...
சிறகில்லாமல் பறந்து கொண்டேன்....
பரவசம் எனும் வார்த்தையை...
புரிந்து கொண்டேன்....
வார்த்தைகள் வராமல்
திக்கி கொண்டேன்....
அணு அணுவாய்
அங்கங்கள் தொட்டு
ரசித்து கொண்டேன்.....
சில நொடியில்
நான் இறந்து மறுபடியும்
உன் தந்தையாய் பிறந்து கொண்டேன்.......