Monday, December 10, 2012

இந்த காதல் தான்....


(கற்பனையில் தோன்றிய ஒரு காதல் கவிதை....தலைவன் பார்வையில் ....)

ஆயிரம் குழந்தைகளை
ஆராய்ந்தால்
அதிகபட்சம்
ஆயிரம்  குழந்தைதனத்தை
அறியலாம் ...
என் காதலி ஒருவளிடம்
எட்டாயிரம் குழந்தைதனத்தை
எளிதில்
எண்ணி விடலாம்...
சுருக்கமாக சொன்னால்
உருவத்தில்
குமரி போன்ற குழந்தை
உணர்வுகளில்
குழந்தை போன்ற குமரி....
கள்ளமில்லா சிரிப்பு....
கருணையான பார்வை....
ஈரமான இதயம்....
தவறாக தொட்டலோ
பேசினாலோ கூட
பகுத்தறியாத பாவை.....
சண்டை என்று வந்தாலோ
சரிசமமாய்
சாமாளிக்கும் பாதகி....
சிரித்து பேசுவாள்
சிறிய விஷயத்திற்கு
சீறுவாள்....
கத்திகொண்டே பேசுவாள்
பேசிக்கொண்டே கதறுவாள்...
கன்னட அணைகள் திறப்பதுதில்லை
கன்னியின் கண்ணனை
திறந்தாலோ நிற்பதில்லை...
இனி பேசுவது
கடினம் ...
சாமாளிப்பது
அரிது....
துண்டித்து விடுவேன்
தொலைபேசியை....
கோபம் வரும்..
குமுறல் எழும்....
ஆண்மை ஆர்ப்பரிக்கும்
காதல் சாந்தபடுத்தும்....
மீண்டும் நானே அழைப்பேன்
எதுவும் நடக்காதது போல
எதார்த்தமாய் பேசுவேன்...
குழந்தையாய் சிரிப்பாள்...
காது வலிக்க மீண்டும்
தொடங்கிவிடுவாள்....
அடம் பிடிக்கும் குழந்தையை
அடித்த பிறகு
அணைக்கும்
அன்னை
தோற்றா போகிறாள்???
இது தோல்வி என்றால்
என் குழந்தைக்காக
தினம் தினம்
தோற்க நான் தயார்....
 எதுவுமே நடக்காதது போல
பேசினாலும்...
மறுகணமே துயரம்
மறந்து சிரிக்கும்
மனது....
இந்த காதல் தான்
எனக்கு இன்னும் உயிரூட்டுகிறது.....
சூரியனால்
சிரிக்கும்   தாமரை போல
தினம் தினம்
உன்னாலே
உயிர்பிக்கப்படுகிறேன் .....

(தலைவியின் பார்வையில்)

இருவர் மீதும் தவறு
இருக்காது
இருந்தாலும் எப்படியோ
இடையில் வந்துவிடுகிறது
வாக்குவாதம்...
என் வார்த்தைகள் மிகும் பொழுது
உன் மௌனம்
எனது உச்ச சுருதியில்
உனது அடக்கம்....
இந்த
இடைவிட பேச்சு
எப்பொழுதும்
என்
அழுகையில் முடியும்
அழுகைக்கு அனுதாபம்
என்றுமே
எனக்கு கிடைத்ததில்லை
மாறாக கிடைப்பது
தொலைபேசி துண்டிப்பு...
வெறுமையாய் இருக்கும்
தனிமை கொல்லும்...
தவறுகள் புரியும்....
எதிர்பாராமல் வரும் உன் அழைப்பு...
எதுவுமே நடக்காதது போல மீண்டும்
எதார்த்தமாய் பேசுவாய்
இந்த காதல் தான்
இன்னும் எனக்கு உயிரூட்டுகிறது...
காந்தத்தால்
கவரப்படும்
இரும்பு துகள் போல
என் ஒவ்வொரு
அணுவும்
உன்பால் கவரப்படுகிறது ......

Thursday, November 8, 2012

சம்மட்டியால் அடிக்கிறது

(தூக்கம் வராத ஒரு இரவில் கிறுக்கியது....)

வீட்டை விட்டு வெளியேறும் பொழுதும்...
விமான நிலைய நண்பர்களின்
விரல்கள் விடு படும் பொழுதும்...
விமானம் ஓடுதளத்தில் ஓடி
மீனம்பாக்கம் கத்திபாரா அடையாறு
சாந்தோம் மெரீனா மறைந்து
கடல் மட்டுமே தெரியும் பொழுதும்....
விமானத்தில் பலர் உடன் இருந்தும்
அந்நியமாய் தோன்றும் பொழுதும்...
மலேசியா மண்ணை மிதிக்கும் பொழுதும்...
அன்றிரவு திடீரென்று விழித்து
அருகில் அவிநாஷை தேடும் பொழுதும்...
சமைக்கும் போது சுட்டு கொண்டோ...
சாதாரணமாய் இடித்து கொண்டோ...
அம்மா என்று அலறும் பொழுதும்...
வேலையை விட்டு அலுப்பாக வந்து
படுக்கையில் விழுந்தவுடன்
கையில் கிடைக்காதா
காபி என எங்கும் பொழுதும்...
ஏனோ தானோ என்று சமைத்து..
பசியில் சாப்பிட அமர்ந்தவுடன்
காரத்திற்கு தண்ணீரோ...
சுவைக்கு உப்போ...
தயிருக்கு கரண்டியோ....
மறந்து போய்
மறுபடியும் எழுந்து எடுக்கும் பொழுதும்...
பாத்திரங்களை கழுவி
நிம்மதியாய் நிமிரும் போது
கண்ணில் படும்
கழுவாத பாத்திரத்தை காணும் பொழுதும்...
துணைக்கு யாரும் இல்லாத போதும்
தூக்கம் வராத இரவுகளிலும்
அலைபேசியில் அழைத்தும்
அடுத்தவர் எடுக்காத பொழுதும்...
பிறந்த நாள்...
மண நாள்....
பொங்கல்...
தீபாவளி...
வந்த சுவடு தெரியாமல்
மறையும் பொழுதும்...
வீட்டில் விசேஷமோ....
ஊரில் திருவிழாவோ...
செல்லவும் முடியாமல் சோகத்தை
சொல்லவும் முடியாமல் தவிக்கும் பொழுதும்....
கஜினி திரைப்படத்தில்
அசினை மண்டையில்
அடிப்பது போல ...
சம்மட்டியால் அடிக்கிறது
தனிமை...... 

Wednesday, August 29, 2012

தந்தையாக பிறந்தேன்......

(இன்று ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொண்டேன்... மதிய வேளை... சாப்பிட்ட  அசதி... தூங்காமல் இருக்க எழுதிய கவிதை.... ஒரு மணி நேரத்தில் எழுதியது.. கருத்துக்கள் அவசியம் தேவை...)

நீ கருவாகும் முன்னே
என் கற்பனையில் உருவானவள்.....
நான் மணமாகும் முன்பே
என் மனதில் மகளானவள்....
நீ பிறப்பதற்கு முன்னே
மைதிலி ரங்கநாயகி என பெயர் கொண்டவள்....
கை பிடித்ததும்...
கட்டில் இட்டதும்...
கடல் கடந்ததும்....
பெண் பிறக்கும் என
பெரியோர் குறித்த நேரத்தில் தான்....
என் மனக்குதிரை
லாடம் கட்டப்பட்டு
உன்னை நோக்கியே பயணப்பட்டிருந்தது....
மனைவியை கூட
மகள் சுமக்கும்
மகராசியாய் தான் பார்த்திருக்கிறேன்....
பெண் பித்து பிடிக்க வேண்டிய சமயத்தில் கூட
பெண் பிள்ளை பித்து பிடித்து அலைந்திருக்கிறேன்....
என் கணக்கில் ஆறாவது வாரம்
நீ இருப்பதாய் கண்டு கொண்டேன்...
ஏழாவது வாரம்
ஒரு சிறு புள்ளியாய் படம் பிடித்து
நீ இருப்பதை உறுதி செய்தார்கள்....
புள்ளி, பட்டாணி, கோலி,
கத்திரிக்காய் போல...
வாரா வாரம்  வளர்ந்து வந்தாய்....
விதி வசத்தால் உன்னை
விட்டு பிரிந்திருந்தாலும்
உள்ளத்தால்
உன்னுடனே மட்டுமே இருந்தேன்.....
ஜோதிடமும்...
சீன கணக்கும் நீ
ஆண் தான் என
ஆணித்தரமாய் உரைத்தது....
உன் அம்மாவின்
முகம் கறுத்துவிட்டது ...
மூக்கு பெருத்துவிட்டது...
ஆண் தான் பிறக்குமென
ஆளுக்கு ஆள்
அடித்து கூறினார்கள்.....
விஞ்ஞான வளர்ச்சியால்...
முப்பத்தி இரண்டாம் வாரம் உன்
முகம் பார்க்க முடிந்தது...
நீ முகம் சுளித்ததும்...
வாய் குவித்ததும்....
பாரதிராஜா கதாநாயகி போல
முகம் மூடியதும்....
சிலிர்த்து போனேன்....
அந்த நாளும் வந்தது...
உலகை நீ காண
உன் அம்மா உடல் வலி பொறுத்தாள்...
நான் அன்று பட்ட
மன வலியும்... பயமும்...
என் வாழ்நாளில் ஒரு நாளை  குறைத்திருக்கும்...
என்னை பெற்றவளும்...
உடன் பிறந்தவளும்...
உடன் பிறக்காத உற்றவனும்...
துணையாய் எனக்கிருக்க...
பதினாறு மணி நேர
போராட்டத்திற்கு பின்னே...
அழகாய் ஒலித்தது உன் அழுகை....
அழுத்தமாய் நீ
அழும் போதே
அறிவித்து விட்டேன் நீ பெண் என்று...
அதையே உறுதி செய்தால் தாதி....
முதன் முதலாய் அத்தையின்
கைகளில் உன்னை கொடுத்த பொழுது...
உன் முகம் பார்க்க துடித்தாலும்...
உனை கைகளில் ஏந்த தவித்தாலும்....
உன்னை ஈன்றவளின்
முகம் முதலில் காண்பதே
முறை என்று பொறுத்திருந்தேன் .....
முதலில் அவளை கண்டதும்
முத்தம் ஒன்று அழுத்தமாய் தந்தேன்...
மொத்தத்தையும் அதுவே உணர்த்திவிட்டது....
கண்ணீரும் மௌனமாய் நிமிடங்கள்
கரைந்தது....
கடைசியில் உன்னை என்
கைகளில் தந்தார்கள்....
தில்லி என உனை செல்லமாய்
அழைத்து கொண்டேன்....
அழுது கொண்டேன்...
அணைத்து கொண்டேன்....
சிலிர்த்து போனேன்...
சிறகில்லாமல் பறந்து கொண்டேன்....
பரவசம் எனும் வார்த்தையை...
புரிந்து கொண்டேன்....
வார்த்தைகள் வராமல்
திக்கி கொண்டேன்....
அணு அணுவாய்
அங்கங்கள் தொட்டு
ரசித்து கொண்டேன்.....
சில நொடியில்
நான் இறந்து மறுபடியும்
உன் தந்தையாய் பிறந்து கொண்டேன்.......

Saturday, May 26, 2012

என் வீடு.....

எனக்கு என் வீடு என்றாலே என் பழைய வீடு தான் நினைவுக்கு வரும். எங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் கலந்த வீடு.... இன்னும் என் கனவுகளில் வரும் வீடு... அது ஒரு பெரிய ஓட்டு வீடு.... வாசற்படிக்கு முன்பே ஒரு பெரிய தாவாரமும் அதன் ஓரத்தில் ஒரு திண்ணையும் இருக்கும்... தினம் தினம் இரவில், அப்பா அந்த திண்ணையில் அமர்ந்து பால்  குடித்து கொண்டே நாட்டு நடப்புகளை நண்பர்களுடன் பேசுவார்.... நாங்கள் தெரு தாவாரத்தில் விளையாடுவோம்... அதன் ஓரத்தில் இருக்கும் பன்னீர் மரத்தின் வாசம் இன்னும் என் நாசியில் உணர முடிகிறது.... இரண்டு தாவாரங்களை தாண்டி சென்றால் பெரிய திறந்த வாசல்.... அதன் இடது புறம் தோட்டத்திற்கு செல்லும் நடை பாதை.... அதன் தரை மிக மிக மிருதுவாக இருக்கும். இன்றைய கிரானைட் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.... வெறும் தரையில் அதன் மேலே படுத்திருக்கும் சுகமே தனி... திறந்த வாசலுக்கு முன்பு ஒரு நடை பாதை இருக்கும்.... காலையில் செய்தி தாள் படிக்க ஏதுவாக  ஒரு பெரிய மேஜை இருக்கும்.... தலைவர்கள் படம் உட்பட பல புகை படங்கள் மாட்ட பட்டு இருக்கும்.... 
திறந்த வாசலுக்கு வலப்புறம் பெரிய கூடம்.... சிவப்பு தரை... வெயில் காலங்களில் அங்கு படுத்தால் குளிரும்.... கூடத்தை தாண்டி நடை பாதை வழியே சென்றால் என் அம்மாவின்  சமஸ்தானமான  சமையலறை வரும்....  சமைக்கும் இடம்... அதை ஒட்டி உணவருந்த நீண்ட இடம்... அதை ஒட்டிய பெரிய கூடம்.... கூடத்தில் அரிசி சேமிக்க மச்சு... அதை தாண்டி தானிய சேமிப்பு அறை... அங்கே ஆளுயர பானைகள் இருக்கும்... தோட்டத்திற்கு செல்லும் நடை  பாதை. அதன் பிறகு விசாலமான மாட்டு தொழுவம்... தோட்டம்...இதை எல்லாம் தவிர பல அறைகளும் அந்த வீட்டில் உண்டு.எந்த    பொருள்  வாங்கினாலும்  அதை  வைக்க  ஒரு  சரியான  இடம்  அந்த  வீட்டில் இருக்கும்  என அம்மா சொல்லி கொண்டே இருப்பாள்.. ஓடு  திருப்பிய பணத்தில் மூன்று வீடு கட்டி இருக்கலாம் என்று அலுத்தும்கொள்வாள்.  மழை காலங்களில் திறந்த வாசில் நீரில் நிரம்பி விடும்.நாங்கள் அனைவரும்  வாளியில் நீரை வாரி இறைப்போம்.... எதிர் வீட்டிலும் இதே கூத்து நடக்கும். 

இந்த  வீட்டை  இடித்து புது வீடு  கட்டும் திட்டம் வந்தது.அங்கு  கடைசியாக  தூங்கிய  இரவு.     ஒவ்வொரு தூணையும் பிடித்து டாட்டா  சொல்லியது.... கிட்ட  தட்ட  இருபது  வருடங்கள்   ஓடி விட்டன.... இன்று  இது  போல  வீடுகள்  காஞ்சியில்  விரல் விட்டு எண்ணி விடலாம்.... இப்படியெல்லாம் வீடுகள் இருக்கும் என்று என்  பிள்ளைகளுக்கு சொல்ல கூட  அது  போல  வீடுகள்  எதிர்  காலத்தில்  இருக்க  போவதில்லை. இன்றைய    வீடுகளில்  வெயில்  மழை  கூட  அன்னியமாகி  விட்டது. உள்ளே  சென்று பூட்டி கொண்டால் எதுவும் தெரிவதில்லை... மின்சாரம்,மின்விசிறி தற்பொழுது குளிர் சாதனம் இல்லாமல் இருக்க முடிவதில்லை... அந்த வீடுகளில் நடந்ததே ஒரு பயிற்சியாக இருந்தது... இன்று சமையலறையை தாண்டினால் வாசற்படி என்றாகி விட்டது....

எட்கர் கெஸ்ட் என்னும் ஆங்கில கவிஞர் இப்படி  சொல்கிறார்... "It takes a heap o' livin' in a house t' make it home".  அன்பு பாசம் பாரம்பரியம் இது எல்லாம்  சேர்த்து கட்டிய பெரிய பொட்டலம் வீடு... இது தான் அந்த ஆங்கில வரியின் சாராம்சம்....