Saturday, May 26, 2012

என் வீடு.....

எனக்கு என் வீடு என்றாலே என் பழைய வீடு தான் நினைவுக்கு வரும். எங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் கலந்த வீடு.... இன்னும் என் கனவுகளில் வரும் வீடு... அது ஒரு பெரிய ஓட்டு வீடு.... வாசற்படிக்கு முன்பே ஒரு பெரிய தாவாரமும் அதன் ஓரத்தில் ஒரு திண்ணையும் இருக்கும்... தினம் தினம் இரவில், அப்பா அந்த திண்ணையில் அமர்ந்து பால்  குடித்து கொண்டே நாட்டு நடப்புகளை நண்பர்களுடன் பேசுவார்.... நாங்கள் தெரு தாவாரத்தில் விளையாடுவோம்... அதன் ஓரத்தில் இருக்கும் பன்னீர் மரத்தின் வாசம் இன்னும் என் நாசியில் உணர முடிகிறது.... இரண்டு தாவாரங்களை தாண்டி சென்றால் பெரிய திறந்த வாசல்.... அதன் இடது புறம் தோட்டத்திற்கு செல்லும் நடை பாதை.... அதன் தரை மிக மிக மிருதுவாக இருக்கும். இன்றைய கிரானைட் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.... வெறும் தரையில் அதன் மேலே படுத்திருக்கும் சுகமே தனி... திறந்த வாசலுக்கு முன்பு ஒரு நடை பாதை இருக்கும்.... காலையில் செய்தி தாள் படிக்க ஏதுவாக  ஒரு பெரிய மேஜை இருக்கும்.... தலைவர்கள் படம் உட்பட பல புகை படங்கள் மாட்ட பட்டு இருக்கும்.... 
திறந்த வாசலுக்கு வலப்புறம் பெரிய கூடம்.... சிவப்பு தரை... வெயில் காலங்களில் அங்கு படுத்தால் குளிரும்.... கூடத்தை தாண்டி நடை பாதை வழியே சென்றால் என் அம்மாவின்  சமஸ்தானமான  சமையலறை வரும்....  சமைக்கும் இடம்... அதை ஒட்டி உணவருந்த நீண்ட இடம்... அதை ஒட்டிய பெரிய கூடம்.... கூடத்தில் அரிசி சேமிக்க மச்சு... அதை தாண்டி தானிய சேமிப்பு அறை... அங்கே ஆளுயர பானைகள் இருக்கும்... தோட்டத்திற்கு செல்லும் நடை  பாதை. அதன் பிறகு விசாலமான மாட்டு தொழுவம்... தோட்டம்...இதை எல்லாம் தவிர பல அறைகளும் அந்த வீட்டில் உண்டு.எந்த    பொருள்  வாங்கினாலும்  அதை  வைக்க  ஒரு  சரியான  இடம்  அந்த  வீட்டில் இருக்கும்  என அம்மா சொல்லி கொண்டே இருப்பாள்.. ஓடு  திருப்பிய பணத்தில் மூன்று வீடு கட்டி இருக்கலாம் என்று அலுத்தும்கொள்வாள்.  மழை காலங்களில் திறந்த வாசில் நீரில் நிரம்பி விடும்.நாங்கள் அனைவரும்  வாளியில் நீரை வாரி இறைப்போம்.... எதிர் வீட்டிலும் இதே கூத்து நடக்கும். 

இந்த  வீட்டை  இடித்து புது வீடு  கட்டும் திட்டம் வந்தது.அங்கு  கடைசியாக  தூங்கிய  இரவு.     ஒவ்வொரு தூணையும் பிடித்து டாட்டா  சொல்லியது.... கிட்ட  தட்ட  இருபது  வருடங்கள்   ஓடி விட்டன.... இன்று  இது  போல  வீடுகள்  காஞ்சியில்  விரல் விட்டு எண்ணி விடலாம்.... இப்படியெல்லாம் வீடுகள் இருக்கும் என்று என்  பிள்ளைகளுக்கு சொல்ல கூட  அது  போல  வீடுகள்  எதிர்  காலத்தில்  இருக்க  போவதில்லை. இன்றைய    வீடுகளில்  வெயில்  மழை  கூட  அன்னியமாகி  விட்டது. உள்ளே  சென்று பூட்டி கொண்டால் எதுவும் தெரிவதில்லை... மின்சாரம்,மின்விசிறி தற்பொழுது குளிர் சாதனம் இல்லாமல் இருக்க முடிவதில்லை... அந்த வீடுகளில் நடந்ததே ஒரு பயிற்சியாக இருந்தது... இன்று சமையலறையை தாண்டினால் வாசற்படி என்றாகி விட்டது....

எட்கர் கெஸ்ட் என்னும் ஆங்கில கவிஞர் இப்படி  சொல்கிறார்... "It takes a heap o' livin' in a house t' make it home".  அன்பு பாசம் பாரம்பரியம் இது எல்லாம்  சேர்த்து கட்டிய பெரிய பொட்டலம் வீடு... இது தான் அந்த ஆங்கில வரியின் சாராம்சம்....

No comments:

Post a Comment