Thursday, November 8, 2012

சம்மட்டியால் அடிக்கிறது

(தூக்கம் வராத ஒரு இரவில் கிறுக்கியது....)

வீட்டை விட்டு வெளியேறும் பொழுதும்...
விமான நிலைய நண்பர்களின்
விரல்கள் விடு படும் பொழுதும்...
விமானம் ஓடுதளத்தில் ஓடி
மீனம்பாக்கம் கத்திபாரா அடையாறு
சாந்தோம் மெரீனா மறைந்து
கடல் மட்டுமே தெரியும் பொழுதும்....
விமானத்தில் பலர் உடன் இருந்தும்
அந்நியமாய் தோன்றும் பொழுதும்...
மலேசியா மண்ணை மிதிக்கும் பொழுதும்...
அன்றிரவு திடீரென்று விழித்து
அருகில் அவிநாஷை தேடும் பொழுதும்...
சமைக்கும் போது சுட்டு கொண்டோ...
சாதாரணமாய் இடித்து கொண்டோ...
அம்மா என்று அலறும் பொழுதும்...
வேலையை விட்டு அலுப்பாக வந்து
படுக்கையில் விழுந்தவுடன்
கையில் கிடைக்காதா
காபி என எங்கும் பொழுதும்...
ஏனோ தானோ என்று சமைத்து..
பசியில் சாப்பிட அமர்ந்தவுடன்
காரத்திற்கு தண்ணீரோ...
சுவைக்கு உப்போ...
தயிருக்கு கரண்டியோ....
மறந்து போய்
மறுபடியும் எழுந்து எடுக்கும் பொழுதும்...
பாத்திரங்களை கழுவி
நிம்மதியாய் நிமிரும் போது
கண்ணில் படும்
கழுவாத பாத்திரத்தை காணும் பொழுதும்...
துணைக்கு யாரும் இல்லாத போதும்
தூக்கம் வராத இரவுகளிலும்
அலைபேசியில் அழைத்தும்
அடுத்தவர் எடுக்காத பொழுதும்...
பிறந்த நாள்...
மண நாள்....
பொங்கல்...
தீபாவளி...
வந்த சுவடு தெரியாமல்
மறையும் பொழுதும்...
வீட்டில் விசேஷமோ....
ஊரில் திருவிழாவோ...
செல்லவும் முடியாமல் சோகத்தை
சொல்லவும் முடியாமல் தவிக்கும் பொழுதும்....
கஜினி திரைப்படத்தில்
அசினை மண்டையில்
அடிப்பது போல ...
சம்மட்டியால் அடிக்கிறது
தனிமை......