Sunday, March 27, 2011

தொலைந்த விளையாட்டுக்கள்....

கோடை விடுமுறை நெருங்கி விட்டது... சமீபத்தில் இந்திய செல்லும் போதெல்லாம் கவனித்த விஷயம் என்பதை விட பாதித்த விஷயம் எனலாம்.... நமது குழந்தைகளின் விளையாட்டு முறை... சிறு வயதில் எனக்கு விளையாட்டு என்றால் ஒரு ஒவ்வாமை தான்... ஆனாலும் தெருவில் நண்பர்கள், அண்ணன் தங்கையுடன் , சொந்தங்களுடன் விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை.... ஓடி புடிச்சி, உக்காந்தா நின்னா, கல்லா மண்ணா, கரண்ட், கிரிக்கெட், கிட்டி புல், பம்பரம், கோலி, பறக்கும் தட்டு இப்படி எத்தனையோ... எல்லாவற்றிலும் எங்கள் அண்ணா கொடி கட்டி பறப்பான்... ஓடுகளை அடுக்கி வைத்து பறக்கும் தட்டால் தட்டி, ஓடி ஓடி தட்டும் மேலே படாமல் மீண்டும் அதை அடுக்கும் சுவாரசியம்... கிட்டி புல்லில் ரன் அளக்கும் முறை, ஓடி ஓடி கரண்ட் கொடுத்து அடுத்தவரை ஓட வைப்பது... விளையாட்டுக்கு விளையாட்டாகவும், ஒரு சிறந்த உடற் பயிற்சியாகவும் நமக்கே தெரியாமல் இருந்திருக்கின்றன... கோடை காலங்களில் இன்னும் ஒரு சுவாரசியம் பட்டம் விடுதல்... அந்த சமயங்களில் காத்தாடி சூத்திரம் தெரிந்தவர் ஒருவித பெருமையுடன் வலம் வருவார்... பட்டம் பறக்க விடுதல், தந்தி அனுப்புதல், டீல் அடித்தல் என எத்தனை சந்தோசம்...
இதை தவிர பெண்களுக்கு பல்லாங்குழி, தாயம், நொண்டி, கயிற்ராட்டம் என பல தனி விளையாட்டுக்குள்... மல்லிகை பூ மல்லிகை பூ ஓடி வந்து கிள்ளிட்டு போ.. ஆடாமல் அசையாமல் கொல்லென்று சிரிப்போம் என ஒவ்வொருவருக்கும் ஒரு தமிழ் பெயர் வைத்து விளையாடும் விளையாட்டு.... பௌர்ணமி தினங்களில் தெருவில் விளையாட்டு, மின்சாரம் இல்லாவிட்டால் தெருவில் எல்லோரும் கூடி விளையாடி, மின்சாரம் வரும் போது கூச்சலிட்டு குதூகலிப்பது... கோகுலம், சிறுவர் மலர் போன்ற புத்தகங்கள்... ஆடிக்கு ஒரு தடவையும் அமாவாசைக்கு ஒரு தடவையும் டிவியில் காட்டும் He-Man போன்ற கார்ட்டூன் தான் எங்கள் சிறு வயது சந்தோசங்கள்....
ஆனால் இன்றைய நிலைமையோ தலைகீழாக இருக்கிறது... இன்றைய குழந்தைகள் தெருவில் கூடி விளையாடும் பண்பு என்பதே இல்லை... வளர்ந்த பிறகு குழு பண்புக்கு (Group skills) வகுப்பு சேரும் நிலைமையில் இன்றைய இளைய சமுதாயம் இருக்கிறது.... செயற்கை கோள் மூலம் பல கார்ட்டூன் அலைவரிசைகள் அவர்களது வரவேற்பு அறைக்கே வந்து விடுகிறது.. இதை தவிர்த்து கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்கள், PS3 எனப்படும் பிரத்யேக விளையாட்டு, கை அடைக்க வீடியோ விளையாட்டுக்கள் இன்னும் எத்தனையோ... விளையாடும் போது கொறிக்க குர்குரே, லேஸ் போன்ற இத்யாதிகள்.... குடிக்க பெப்சி, கோக் போன்ற சமாச்சாரங்கள்.... "என் பையன் வீடியோ கேம்ஸ் புலி" " என் பொண்ணு ஒரு 500ml பெப்சி யாருக்கும் கொடுக்காமா குடிப்பா" என இதை ஆதரிக்கும் பெற்றோர்கள்.... விளைவு கண்ணாடி... உடல் பருமன்... முதுகு வலி... என சிறு வயதிலேயே டாக்டரிடம் அலைவது.... இன்றைய சட்டம் ஒழுங்கும் பிள்ளைகளை வெளியே விடும் அளவிற்கு இருக்கிறதா என்பதும் கேள்வி குறி தான்?
பாரதி சொன்னது போல ஓடி விளையாடும் குழந்தைகள் இன்று எத்தனை? இன்று பாரதி இருந்திருந்தால் "வீட்டுக்குள்ளே குழந்தையை பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள்" என பாடி இருப்பாரோ?