Saturday, January 17, 2015

கே. பி யும் நானும்

     இந்த தலைப்பை கே. பி உடன் பழகியவர்கள் மட்டும் தான் வைக்க வேண்டுமா? அவர் படங்களை அணு அணுவாய் பார்த்து ரசித்த எனக்கு இந்த தலைப்பை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.... நான் என்று கே. பி யின் ரசிகனானேன்...  புது புது அர்த்தங்கள் (1989) அழகன் (1991)... இது இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த அவர் படங்கள்... முறையே எனக்கு 9 மற்றும் 11 வயது... சொன்னாலும் நீங்கள் நம்ப போவதில்லை... விடுங்கள்....
     அவரது படங்களை தேடி தேடி பார்த்து இருக்கிறேன்... நான் ரசித்ததை பகிர்கிறேன்....  கே. பி டச்.... தமிழ் சினிமா உலகில் பிரபலமான வார்த்தை...   அவரது வசனம் நேராக நெஞ்சை துளைக்கும் சிறு அம்பு... 
  • சர்வர் சுந்தரத்தில் ஒரு காட்சி... தன் காதலை சொல்ல நாகேஷ்  கே. ஆர் விஜயாவிடம்   பூங்கொத்து  ஒன்றுடன் வருகிறார்... காதல் மறுக்க படுகிறது... போகும் பொது குப்பை தொட்டியை எடுத்து கொண்டு செல்கிறார்....  
  •  மரோ சரித்தராவில் காதலிக்கும் இருவர் மாற்றி மாற்றி விளக்கை போடும் காட்சி... 
  • அரங்கேற்றம்- குடும்ப சூழ்நிலையால் விபச்சாரியாய் இருக்கும் கதாநாயகி வீட்டில் பலர் முன்னிலையில் புடவை விலகி விடுகிறது... அதற்கு அவள் " ஆம்பளங்கரதே மருத்து போச்சு டி" என்கிறாள்... அதை கேட்ட அவள் தாய் படத்தத்துடன் தந்தையிடம் சொல்கிறாள்... உண்மை வெளியாகி விட்டது என்று நாம் நினைக்கையில் அவள் தந்தை சொல்கிறார் " ஆம்பளங்கரதே மறந்து  போச்சு டி" என்று சொல்லி இருப்பாள்  என்கிறார் 
  • பாமா விஜயம்- சௌகார் ஜானகிக்கு ஹிந்தி தெரியும் ஆனால் ஆங்கிலம் தெரியாது...  ஓரகத்தி காஞ்சனாவிற்கு ஆங்கிலம் தெரியும் ஹிந்தி தெரியாது... பாமா என்ற நடிகை வீட்டிற்கு வருவதற்குள் ஆங்கிலம் கற்க நினைக்கும் சௌகார் "Cat" "Rat" மட்டும் படித்திருப்பார். அதற்குள் நடிகை வீட்டிற்கு வந்துவிடுகிறாள். சௌகார் பாமாவிடம் " ஒரே ""Rat" தொல்லையா இருக்கு ஒரு " Cat" வாங்கலாம்னு பார்க்கறேன் என்பார்... அதற்கு காஞ்சனா "cat" எதற்கு ஒரு "Trap" வாங்கினா போதுமே என்பார். சௌகார் என "Trap" ஆ  என விழிப்பார்
  • அவள் ஒரு தொடர்கதை - "கல்யாணத்திற்கு முன்னாடி கர்வமா இருக்கலாம் கர்ப்பமா தான் இருக்க கூடாது "  என்ற வசனம்.  வசனமே இல்லாமல் வெறும் மேள சத்தம் மட்டும் வைத்து எடுக்க பட்ட கிளைமாக்ஸ் காட்சி.
  • இரு கோடுகள் - சௌகார் ஜானகி வட நாட்டில் இருந்து வந்த கலெக்டர்.. அடிக்கடி "அச்சா" என்று சொல்வார்... அவளிடம் குமாஸ்தாவை இருக்கும் ஜெமினியை அவர் மனைவி ஜெயந்தி சௌகார் உடன் இணைத்து சந்தேகப்படுவாள். அதை நேரடியாக சொல்லாமல் வீட்டில் பாத்திரத்தை போட்டு உருட்டுவாள்... பிள்ளைகளை அடிப்பாள்... ஜெமினி அவளிடம் எனக்கு நேரமாச்சு உனக்கு என்ன பிரச்சினை? சுருக்கமா சொல்லு என்பார். ஜெயந்தி "அச்சா" என்பாள்... 
  • வெள்ளி விழா - ஜெயந்தி அமைதியான கதாநாயகி.. வாணி ஸ்ரீ ஆர்ப்பாட்டமான கதாநாயகி... இருவரையும் அவர்கள் பாடும் பாடலே வேறு படுத்தி காட்டி விடும்... "காதோடு தான் நான் பாடுவேன்"-ஜெயந்தி பாடும் பாடல்.. " நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்"- வாணி ஸ்ரீ பாடும் பாடல்... முன்னதை ஆர்ப்பாட்டமான பாடல்களை பாடும் எல். ஆர் . ஈஸ்வரியை பாட வைத்து இருப்பார்... அமைதியான பாடல்களை பாடும் பி. சுசிலாவை சத்தம் போட்டு தான் பாடுவேன் பாடலை பாட வைத்து இருப்பார். 
  • அச்சமில்லை அச்சமில்லை- மிக நல்லவனாக இருந்த ராஜேஷை காதலித்து திருமணம் செய்வார் சரிதா... ஆனால் அரசியலில் சேர்ந்து மிக கொடியவனாக மாறி விடுவார் ராஜேஷ்...தன் தந்தையான வி. எஸ் ராகவனை அடிக்கும் ஒரு காட்சி... அடிக்கும் சத்தம் மட்டுமே கேட்கும்.. நாம் திரையில் காண்பது சரிதாவின் முக பாவம்/ உணர்ச்சிகள் மட்டுமே.
  • அவர்கள்- எதற்குமே கலங்காத அனு கடைசியில் தன் வீட்டில் வேலை செய்தவள் தான் தன் மாமியார் என்று தெரிந்து அந்த அன்பிற்காக அழும் காட்சி 
  • அபூர்வ ராகங்கள் - ஒரு சிறிய நூலில் ஸ்ரீவித்யா கமலை கட்டி போடும் காட்சி
  • வறுமையின் நிறம் சிவப்பு-  சாப்பாடே இல்லாமல் கமல் மற்றும் நண்பர்கள் சாப்பிடும் காட்சி- முடி திருத்தும் கடையில் கமல் தன் அப்பாவான பூர்ணம் விஸ்வநாதனிடம் பேசும் காட்சி 
  • அக்னி சாட்சி - சரிதா தன் கணவர் சிவகுமாரிடம் என்ன எவ்ளோ லவ் பண்றீங்கன்னு சொல்லுங்க என்பாள்.  சிவகுமார் அவளது ஆளுயர போட்டோவை பிரேம் செய்து காட்டுவார்... சரிதா சொல்லும் குட்டி கவிதைகள் 
  • சொல்லத்தான் நினைக்கிறன்- சிவகுமாரை காதலிக்கும் ஸ்ரீவித்யா தினமும் ஒரு காதல் கடிதம் எழுதி அவரிடமே கொடுத்து தபாலில் சேர்க்க சொல்வார்... அவரும் அப்படியே செய்வார்.. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்த பின் ஸ்ரீவித்யா சிவகுமாரிடம் தினமும் கொடுத்த கடிதத்தை ஒன்றை கூடவா படித்து இல்லை நீங்கள் உண்மையிலே நீங்கள் ஒரு ஜென்டில் மென் சார் என்பார்.
  • சிந்து பைரவி - கர்நாடக சங்கீதத்தின் உச்சத்தில் இருக்கும் சிவகுமார் குடி நோயாளியாக மாறி தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் பாடல் பாடுவார். பாடலின் முடிவில் அவரது வேட்டி அவிழ்ந்து விழும் அதை  சுலோச்சனா பார்த்து கண் கலங்குவார். அந்த ஒரு நிமிடம் அவர் கம்பீரமாய் சாதகம் செய்யும் காட்சி நடுவில் ஒரு பிரேம் வந்து போகும்... 
  • உன்னால் முடியும் தம்பி-  கூலி தொழிலாலர்களுக்காக "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு" பாடல் பாடுவார் கமல். வீட்டில் இசை சக்ரவர்த்தியான அவரது தந்தை ஜெமினி என்ன ராகம் டா பாடின என கேட்பார்? சுத்த தன்யாசி என்பார் கமல். சுத்த தன்யாசியா அது அசுத்த தன்யாசி டா என்பார்- கமலின்  அண்ணி மனோரமா உங்க தம்பி ஹரிஜன பெண்ணை விரும்புகிறானே உங்கள் கருத்து என்ன என கேட்பார்? நாதஸ்வர வித்துவானும் ஊமையுமான அவரது அண்ணன் நாதஸ்வரத்தில் "ரகுபதி ராகவ ராஜாராம் " என்ற சர்வ மத பிரார்த்தனை பாடலை வாசித்து சம்மதம் என்ன சொல்லாமல் சொல்லுவார்.  அவர் வசிக்கும் பொது அந்த நாதஸ்வரத்தின் குழல் காந்தியின் காதுகளில் இருக்கும்.
  • புது புது அர்த்தங்கள்- ஒரு கவர்ச்சி நடிகையின் பக்கத்தில் அமர்ந்துவிட்டு வந்த பாடகர் கணவனை - "அவ கண்ண சாச்சு கைய நீட்டி எதோ சொன்னாலே அதுக்கு முன்னாடி... நீங்க ரெண்டுபேரும் சிரிச்சிங்களே அதுக்கு அப்புறம் என்ன சொன்ன ? என்ற வசனம்.. திருமண பந்தம் என்றால் என்ன என்று சௌகார் ( பேபி பெர்னாண்டஸ்) மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் (ரூபி பெர்னாண்டஸ்) மூலம் உணர்த்தும் காட்சிகள்....
  • அழகன்- பரதநாட்டிய கலைஞரான பானுப்பிரியா நடனமாடிக்கொண்டே மம்முட்டியை திட்டுவது... அவர் பரிசளித்த காரை சுற்றி சுற்றி வந்து பார்த்து முத்தமிடுவது... அவளது உதட்டு சாயம் காரில் பதிவது... டெலிபோன் பிரபலமான அந்த காலத்தில் டெலிபோனே ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட விதம்- இரவெல்லாம் டெலிபோன் பேசுவதை தொலைக்காட்சி வழியே காட்டிய நேர்த்தி...
  • கல்கி- " நான் செய்தது சரின்னு சொல்ல வரல ஆனா  நான் செய்தது தப்பு இல்ல" என வாதாடும் காட்சி. 
இன்னும் ஏத்தனையோ படங்கள் காட்சிகள். நினைவில் வந்ததை எழுதினேன். பாடல் காட்சிக்கு அவர் தந்த முக்கியத்துவம். பாடல் படமாக்கும் விதத்தை பார்க்க வேண்டுமா? அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் பாருங்கள் .. மெட்டுக்கு பாட்டு எழுதும் முறையை பார்க்க வேண்டுமா? சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலை பாருங்கள்... அந்தாதி என்றால் என்ன? வசந்தகால நதிகளிலே பாடல் கேளுங்கள்....   பாடலிலேயே கிளைமாக்ஸ் வேண்டுமா?  கேள்வியின் நாயகனே பாடல் பாருங்கள்.  இசைக்கு அவர் தந்த முக்கியத்துவம் மிக சிறந்தது. சிந்து பைரவிக்கு பிறகு தான் தமிழ் இசைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. அபூர்வ ராகங்களில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒரு அபூர்வ ராகம். உன்னால் முடியும் தம்பி படத்திலும் இசைக்கு ஒரு முக்கிய இடம். கணேஷ்- குமரேஷ் வயலின், கத்ரி கோபால்நாத் சாக்ஸபோன், ராஜேஷ் வைத்யா வீணை என பல பிரபலங்களை திரையில் அறிமுகபடுத்திய பெருமை அவருக்கு உண்டு...

கதாநாயகிகளின் மேனரிசம் கே. பி யின் ஒரு சிறப்பம்சம்.. டொண்டொடைன்
 ( ஜெயசித்ரா- சொல்லத்தான் நினைக்கிறன்)...  படாபட் ( ஜெயலக்ஷ்மி- அவள் ஒரு தொடர்கதை),  விடுகதை கூறி நாக்கை ஆட்டுவது (ஜெயசுதா- அபூர்வ ராகங்கள்), இல்லை என்பது போல ஆமாம் என தலையை ஆட்டுவது (ஜெயப்ரதா- நினைத்தாலே இனிக்கும்)..உதட்டை குவித்து உச்சு கொட்டி சரி  என சொல்வது ( குஷ்பூ- ஜாதி மல்லி).

பத்திரிகைகள் பல அவரது பண்பு, அறிமுக படுத்திய புது முகங்கள் பற்றி எல்லாம் எழுதி விட்டன. எனக்கு பிடித்த சிலவற்றை இங்கு எழுதினேன். சிந்து பைரவி படத்தில் சுஹாசினி சொல்வார் " இசையை நாம் பாடி மகிழ்வது ஒரு சுகம், பிறர் பாடி கேட்பது ஒரு சுகம், இசையை பற்றி பேசி கொண்டே இருப்பது ஒரு சுகம்". அது போல " கே. பி யின் படம் பார்ப்பது ஒரு சுகம், அதை பற்றி பிறர் சொல்லி நான் படிப்பது ஒரு சுகம், அவரை பற்றி பேசி கொண்டே  இருப்பது ஒரு சுகம்".